கோயம்பேட்டில் கொரோனா பரவல்: சிவப்பு மண்டலமான அரியலூர்!

Published On:

| By Balaji

கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 176 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சமூகப் பரவல் ஏற்பட்டுவிடுமோ என அச்சப்படக்கூடிய வகையில் சென்னையின் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவல் அதிகரித்தது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகளில் சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் அனைவரையும் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட நிலையில், நேற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் அவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது நேற்று தெரியவந்தது. ஏற்கனவே 8 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர், தற்போது பாதிப்பு அதிகம் கொண்ட சிவப்பு மண்டலமாக மாற்றப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. .

இதுபோலவே கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவலின் மையமாக கோயம்பேடு இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் 77 வயதான தாயார் கொரோனாவால் உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழில்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share