கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கம்: துரைமுருகன் கேள்வி!

public

மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க கலைஞர் அறிவித்த “கோட்டை அமீர் பதக்கத்தை” குடியரசு தின விழாவில் வழங்காததற்கு அதிமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த கோட்டை அமீர், மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டு, இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று அயராது போராடி தனது இன்னுயிரை நீத்தார்.

நாட்டின் ஒற்றுமைக்கான அவரது பணியினைப் பாராட்டி, அவர் பெயரில் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” அறிவிக்கப்பட்டு, அந்தப் பதக்கம் ஒவ்வோர் ஆண்டும் சமய நல்லிணக்கத்துக்காகப் பாடுபடும் ஒருவருக்கு, குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என 15.5.2000 அன்று சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கலைஞர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்தப் பதக்கம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி, இந்தப் பதக்கம் பெறுபவருக்கு 25,000 ரூபாய் ரொக்கப்பணமும் கொடுக்கப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு கோட்டை அமீர் பதக்கம் தமிழக அரசால் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து துரைமுருகன் நேற்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற தேர்தலில் அமையப் போகும் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாகவும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்தும் ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்பட்டுவந்த கோட்டை அமீர் பதக்கத்தை இவ்வாண்டு, யாரையும் தேர்வு செய்யாமலும், அந்தப் பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் முதல்வர் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உன்னதக் கோட்பாட்டின் ஓர் அடையாளமாகக் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிலேயே இப்படியொரு வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவரை இழிவுபடுத்தியிருப்பதும், சமய நல்லிணக்க உணர்வைக் கொச்சைப்படுத்தியிருப்பதும் மிகுந்த கண்டனத்துக்குரியது.

ஆகவே, சமய நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட ஒருவரை ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்துக்கு’த் தேர்வு செய்து அவருக்கு அந்தப் பதக்கத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூரும் வகையில் கோட்டை அமீரின் 25ஆவது ஆண்டு மறைவு தினத்தை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *