கோடீஸ்வரர்களுக்கு எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்குக் கடன் கொடுக்கும்போது வேறு மாதிரியாக நடத்தப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கேளூரை சேர்ந்த ஏழை மாணவி மதியழகி 2011-12ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்காக வங்கியில் கல்விக் கடனாக 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்திருந்தார்.
அந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்காத காரணத்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றமும் கல்வி கடன் வழங்குவதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, “கோடீஸ்வரர்களுக்கு எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள், ஏழை மாணவிக்குக் கல்விக் கடன் கொடுக்காமல் அலைக்கழித்ததற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்” என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், “மாணவி மதியழகி படிப்பை முடிக்கும் வரை இந்த வழக்கை இழுத்தடித்து அவருடைய கோரிக்கையையே வங்கி செல்லாததாக ஆக்கி விட்டது” என்று வேதனை தெரிவித்தனர். 50 நிறுவனங்கள் 48 ஆயிரம் கோடி வரை கடனை வங்கிக்குத் திருப்பி செலுத்தாத நிலையில் கல்விக் கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் என்று எந்த வழக்கும் இதுவரை இல்லை.
கடன் மறுப்பதால் விஞ்ஞானிகள், டாக்டர்கள், பொறியாளர்களின் சேவையை நாடு பெறுவதை மறுத்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்திய வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அந்தத் தொகையை இரண்டு வாரத்தில் மாணவிக்கு வழங்க உத்தரவிட்டனர்.
�,