^கொள்ளை போகும் வங்கிகளைக் காப்போம்!

Published On:

| By Balaji

பொதுத் துறை வங்கிகளுக்குப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. அந்த வங்கிகளிலுள்ள மக்கள் அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் தனியார் கைகளுக்கு எந்நேரமும் மாறப்போகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்… பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் கொள்கையும், சட்டத்தையும் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரத் தயார் நிலையில் உள்ளது. பொதுத் துறை வங்கிகளின் முக்கியத்துவத்தையோ அல்லது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவை ஆற்றிய பங்கினையோ அறியாமல் வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினர் ஆதரித்து வருகின்றனர்.

பொதுத் துறை வங்கிகள்தான் நாட்டு மக்களின் பொது வளங்களாகத் திகழ்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொதுத் துறை வங்கிகளே அடிப்படையாக உள்ளன. பொதுத் துறை வங்கிகள் இல்லாவிட்டால் அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ சாத்தியமில்லை. 1960களுக்குப் பின்னர், நாடு அடைந்த வளர்ச்சியே இதற்கு உதாரணம்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1969இல் ஜூலை 19ஆம் தேதியன்று 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. பின்னர்,1980இல் கூடுதலாக ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இதற்குப் பின்னர்தான் சாதாரண எளிய மக்கள் வங்கியில் இட்ட பணமானது பாதுகாப்பான நிலையைப் பெற்றது. வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னதாக நூற்றுக்கணக்கான தனியார் வங்கிகள் சீட்டுக்கட்டைப் போன்று வரிசையாக திவாலாகி சரிந்து விழுந்தன. மக்கள் தங்களது குடும்பங்களின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகளுக்காகவும் தேவைகளுக்காகவும் அரும்பாடுபட்டுக் கடுமையாக உழைத்துச் சேமித்த பணமும் வங்கிகளோடு காணாமல் போனது. 1960களில் விவசாயத் துறையானது நாட்டின் சராசரி உற்பத்திக்கு 44 விழுக்காடு அளித்தது. ஆனால், அப்போதிருந்த தனியார் வங்கிகளோ விவசாயக் கடனாக மொத்தம் 2 விழுக்காடுதான் அளித்தன.

அன்று நாடு கடுமையான வறுமையில் இருந்தது, மக்களுக்கே போதிய உணவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர்தான் முதன்மைத் துறைக்கு கடன் அளிக்க வேண்டுமென்ற திட்டமே அமலுக்கு வந்தது. 40 விழுக்காடு கடன்கள் முதன்மைத் துறைகளான விவசாயம், கைவினைஞர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், சிறிய கடைகள் ஆகியோருக்கு அளிக்கப்பட்டன. இந்த 40 விழுக்காட்டில் 18 விழுக்காடு மட்டும் விவசாயத் துறைக்கு அளிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் விவசாய உற்பத்தி பெருகியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதுதான் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வழி வகுத்தது.

நாடு முழுவதும் கிராமங்களிலும் கிராமங்களிலிருந்து நகரமாகிக் கொண்டிருக்கிற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன. ஒருபுறம் மக்கள் பணத்தை வங்கிகளில் சேமிக்க ஊக்குவிக்கப்பட்டனர். இன்னொருபுறம் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்திட வங்கிகள் வழி வகுத்தன.

தனியார் வங்கிகள் டாட்டா, பிர்லா மற்றும் தாப்பர் ஆகிய பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை பொது வங்கிகளாக மாற்றப்பட்டு விவசாயம், வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஏற்றுமதி மற்றும் பகுதி வாரியாக உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்வது ஆகிய முதன்மைத் துறைகளுக்கு சேவை புரியத் தொடங்கின. சுருக்கமாகக் கூறவேண்டுமானால், சிறுபான்மையாக உள்ள பணக்கார வர்க்கத்தினருக்குச் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் கோடிக்கணக்கான சாதாரண எளிய மக்களுக்குச் சேவை புரிவதற்காக மாற்றப்பட்டன.

பொது வங்கிகளின் மக்களுக்கான பயணம் 1991 வரை தொடர்ந்தது. புதிய தாராளவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், முக்கியமான தாக்குதல் இலக்காக வங்கிகள் இருந்தன. வங்கிகள் தொடர்பான சட்டங்கள் 1993-94இல் திருத்தப்பட்டு அரசின் பங்கானது 100 விழுக்காட்டிலிருந்து 51 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த ஆட்சிகள் ஒரு வழியிலோ அல்லது இன்னொரு வழியிலோ பொது வங்கிகளைப் பலவீனப்படுத்துவதிலேயே குறியாக இருந்தன. அது நரசிம்மன் 1 மற்றும் 2ஆம் கமிட்டிகளும், தாராப்பூர் கமிட்டியும், ரகுராம் ராஜன் கமிட்டியும், பிஜே நாயக் கமிட்டியும் பொது வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு பரிந்துரைத்தன. அந்தக் கமிட்டிகள் மக்களுக்கான வங்கிகளை உயர் வர்க்கத்தினருக்கான வங்கிகளாக மாற்றுவதற்கே முயற்சி செய்தன. இதற்கெல்லாம் உச்சத்தில் 2015இல் பூனாவில் நிதியமைச்சரின் தலைமையில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூடி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கொள்கைகளையும் நீக்கிடக் கோரினர். உதாரணமாக, முதன்மைத் துறைக்கு கடன் அளிப்பது, கிராமங்களிலுள்ள வங்கிகளின் கிளைகளைக் குறைப்பது மற்றும் கட்டுமானங்கள் உருவாக்குவதற்கான கடன்களை குறைப்பது அல்லது மறுப்பது ஆகிய நடவடிக்கைகளை முன் வைத்தனர்.

தற்போதைய மோடி அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதில் படுவேகம் காட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பொதுத் துறை வங்கியாக உள்ள ஐடிபிஐ வங்கியானது தவறான கடன் அளிக்கும் கொள்கையினால் ரிசர்வ் வங்கியினால் தனியார்மயமாக்கப்பட உள்ளது. தேனா வங்கியானது கடந்த மே 8ஆம் தேதியிலிருந்து புதிதாகக் கடன் அளிப்பதற்கும் ஊழியர்களை நியமிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன் உயிரைப் பறித்து மூடுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்தே வாராக் கடன் சுமை மிக வேகமாகக் கூடியது. பதவி ஏற்கும்போது ரூ.2.16 லட்சம் கோடிகளாக இருந்தது கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கோடிகளாக அதிகரித்துள்ளது. மிகப்பெரிய கடன்களை வாங்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் (அதிகபட்ச வரம்பு ரூ.5 கோடிதான்) வரம்பற்ற முறையில் கடன்கள் அளிக்கப்பட்டன.

கல்விக் கடன் அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடமான சொத்தின் மதிப்பாக 100 விழுக்காடு கேட்கப்படுகிறது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு அந்தக் கடன் தொகையில் வெறும் 15லிருந்து 20 விழுக்காடு வரைதான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட குறைவான தொகையைப் பெறுவதால் அந்தக் கடன் மோசமான கடனாக அதாவது வாராக் கடனாக மாறும்போது வாங்கிய கார்ப்பரேட்டுகள் எந்தப் பொறுப்பையும் சுமப்பதில்லை. அந்த கம்பெனிகள் லாபகரமாக இயங்கினாலும் அவற்றின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. தற்போதைய வங்கிச் சட்டங்கள் வாராக் கடன்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து வசூலிப்பதில் தோல்வியடைந்து விட்டன. அவற்றால் எந்தப் பயனும் இல்லை. இந்த ஆண்டின் மார்ச்சில் மட்டும் 85.6 விழுக்காடு வாராக்கடன்கள் உள்ளதாக நிதி உறுதி அறிக்கை கூறுகிறது.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மொத்த லாபமாக ரூ.5,89,359 கோடி இருந்தது. ஆனால் ரூ.77,642 கோடிகள் நஷ்டம் ஆனது. இதில் 90 விழுக்காடு வாராக்கடனால் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் மிகப்பெரிய அளவில் கடன்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசினால் ரூ.1,47,000 கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றால் பாஜக அரசினால் ரூ.2,72,000 கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது 2017 வரையிலான தள்ளுபடியாகும். மீண்டும் இவ்வாண்டு வங்கிகளின் மொத்த வருமானத்தில் 90 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளும் சாதாரண மக்களுக்கு உண்மையிலேயே சேவை புரிந்தன. ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்தன. அவர்களுக்கு மிகக்குறைவான வட்டியில் கடன் அளித்தன. குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காவிட்டால் அபராதத்தை மிகக்குறைவாக விதித்தன. ஆனால், அது தனியார் வங்கியில் மிக அதிகமாக இருந்தது. அதே போல ஜன் தன் வங்கிக் கணக்குகள் மொத்தம் 32 கோடிக்கணக்குகளில் 26 கோடிக் கணக்குகள் பொதுத் துறை வங்கிகளில்தான் திறக்கப்பட்டன. ஆனால், தனியார் வங்கிகளில் 1 கோடிக் கணக்குகள்தான் திறக்கப்பட்டன.

பாஜக அரசினால் தனியார் வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தனியார் வங்கிகள் சாதாரண மக்களுக்குச் சேவை செய்யாது. அவை பணக்காரர்களுக்குத்தான் சேவை செய்யும். ஆனால், பொதுத் துறை வங்கிகளோ சாதாரண எளிய மக்களுக்குத்தான் சேவை புரியும். அவை திடீரென்று திவாலாகாது. மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விடாது. ஆனால், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தொடங்கி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சாரியா வரை அனைவருமே வங்கிகள் தனியார்மயமாக்குவதைத்தான் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இறுதியில் மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அவர்கள் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் உலக நாடுகள் கற்பிக்கும் பாடம்.

ஆதாரங்கள்:

1.Save public sector Banks , Editorial, People”s Democracy.

2. Merger of PSBs . Frontline

**சேது ராமலிங்கம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share