கொல்லிமலை-ஒடிஸா மலைக்கிராமங்கள் ஒரு ஒப்பீடு-ரா.கோபிநாத்.

Published On:

| By Balaji

கடந்த மே மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலையிலுள்ள மலைக்கிராமங்கள் மற்றும் ஒடிஸா மாநிலம், கோராபுட் மாவட்டத்திலுள்ள குந்த்ரா வட்டார மலைக்கிராமங்களிலும் பயணித்து மக்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியது. இருவேறு மாநிலங்களின் மலைக்கிராமங்களின் தற்போதைய நிலையை ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பாக இந்தச் சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்தி என் புரிதல்களை இக்கட்டுரையில் விவரித்துள்ளேன்.

கொல்லிமலைக் கிராமங்களின் தலைமையிடமாக விளங்கும் செம்மேட்டிலிருந்து அதைச் சுற்றியுள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் பெரும்பாலும் தார் சாலைகளாகவும், கிராமத்துக்கு உள்ளேயுள்ள தெருக்கள் சிமெண்ட் தெருக்களாகவும் விரவிக் கிடக்கின்றன. இதன் காரணமாகக் கொல்லிமலையில் உள்ள உள்ளடங்கிய குக்கிராமத்துக்குக்கூட தங்களது தேவைகளுக்காக, செம்மேட்டையோ அல்லது மலையோர முக்கிய நகரங்களையோ சென்றடைவது எளிதாகிறது. மேலும்,மலைக்கிராமங்களைச் சுற்றி முக்கிய சாலைகளில் பேருந்து இயக்கப்படுவதால், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் அதிக பட்சமாக 5 கி.மீ தொலைவுக்குள் பேருந்து வசதியைப் பெறமுடிகிறது. இவற்றோடு தனிநபர்களின் இருசக்கர வாகனங்களும் குறிப்பிட அளவில் கிராமங்களில் காணப்படுகிறது.

அதேவேளையில் ஒடிஸாவின் குந்த்ரா வட்டாரத்தின் முக்கிய நகரிலிருந்து மாவட்டத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் ஜெய்பூர், மற்றும் முக்கிய நகரான பொய்பரிகுடா ஆகியவற்றை இணைக்கும் முக்கியச் சாலைகள் மட்டுமே தார் சாலைகளாக அமைந்துள்ளன. மேலும் இந்த நகரங்களிடையே கூட மிகச்சிறந்த அளவில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அரசாங்க பேருந்து வசதி என்பது இங்கு கிடையாது. பெரும்பான்மையான மக்கள் இந்நகரங்களுக்குச் சென்றுவர ஷேர் ஆட்டோவையே பயன்படுத்துகின்றனர்.

நகரங்களுக்கிடையே போக்குவரத்து வசதிகள் இவ்வாறு உள்ளதெனில் கிராமப்பகுதியை பார்க்கும்போது மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. முக்கியச் சாலைகளிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் எந்தச் சாலையும் தார் சாலையாக இல்லை. பெரும்பாலும் மண் சாலைகளாகவே உள்ளன. குண்டும்குழியும் இல்லாத கிராமப்புறச் சாலைகள் என்பது குந்த்ரா வட்டாரங்களில் கிடையாது. எனவே, மக்கள் பாதசாரிகளாகவும், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தியுமே அருகில் உள்ள முக்கிய நகரங்களை சென்றடைகின்றனர். அதிலும் ஒவ்வொரு ஷேர் ஆட்டோவிலும் குறைந்தது 1௦ பேர் பயணிக்கின்றனர். இவற்றில் பயணிக்கும் வயதானவர்கள் மற்றும் பெண்களின் துயரங்களை வார்த்தையால் விவரிக்க இயலாது. அதை நேரில்காணும் போதுதான் நம்மால் உணர முடியும். குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் அவசரக்காலங்களில் இச்சாலைகள் வழியே சென்றுதான் குந்த்ராவை அடையமுடியும். ஏனெனில், குந்த்ராவில்தான் மருத்துவமனை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிச் சிறுவர்களும் அவசர வேலையாகச் செல்லும் நபர்களும் நாள்தோறும் இந்த சாலையில் அவஸ்தையை அனுபவிக்கின்றனர்.

சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளுக்குப் பிறகு நம் கண்முன்னே தெரியும் மற்றுமொரு விஷயம் வீடுகளின் தன்மை. கொல்லிமலையின் உள்ளே உள்ள சிறு கிராமம் புதுவளவு. இக்கிராமத்திலிருந்து செம்மேட்டை இருசக்கர வாகனத்தில் சென்றடையவே ஒரு மணி நேரமாகும். இக்கிராமத்து மக்கள் வெளியூறுகளுக்குச் செல்வதென்பதே மிகக் குறைவுதான். இம்மக்கள் வாழும் வீடுகள் பல்வேறு காலகட்டங்களில் அரசாங்கத்தினால் கட்டி தரப்பட்ட கான்கிரீட் வீடுகள். இதேநிலைதான் கொல்லிமலையில் உள்ள ஏனைய கிராமங்களிலும் காணப்படுகிறது. ஒருசிலர் அரசாங்க உதவிகளோடு சேர்த்து தங்களது நிதியையும் பயன்படுத்தி வீட்டை வசதியாக விரிவாக்கிக் கொள்கின்றனர்.

கூரை வீடுகள் என்பது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சி தருகின்றன.

அதேவேளையில் குந்த்ரா வட்டாரப் பகுதியிலுள்ள கிராமங்களில் பெரும்பான்மையான வீடுகள் கூரை வீடுகளாகவும், மண் தரையை கொண்டதாகவும் உள்ளன. அரசாங்கத்தினாலோ அல்லது தனி நபர்கள் தாங்களாகவோ கூடிய கான்கிரீட் வீடுகள் என்பதோ மிகச்சிலதான். கூரையால் வேயப்பட்டு மாட்டுத் தொழுவத்தோடு எந்நேரமும் சாண வாடையுடன் கூடிய வீடுகளைக் காணும்போது, 1980-களில் தமிழகத்தில் உள்ள எனது கிராமத்தின் நினைவு வந்தது. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால்,தமிழகத்திலுள்ள ஒரு குக்கிராமம் 1980-களின் ஆரம்பக்கால கட்டத்தில் இருந்தது போலவே, தற்போது குந்த்ராவின் கிராமங்களின் உள்ள வீடுகள் காணப்படுகின்றன.

சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு அடுத்ததாக முக்கியமானதொரு கட்டமைப்பு வசதி மின்சாரம். கொல்லிமலைக் கிராமங்களில் வீடுகளிலும் தெருக்கள் உள்ள இடங்களிலும் தெருவிளக்குகளும், அவ்வாறு இல்லாத இடங்களில் பெரும்பாலும் சூரியஒளியைப் பயன்படுத்தி இயங்கும் சோலார் விளக்குகளும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் தெருவில் வெளிச்சம் கிடைப்பது மலைக்கிராமங்களாக இருந்தாலும் சாத்தியமாகியுள்ளது.

ஆனால், வட்டாரத்தின் முக்கிய நகரான குந்த்ராவில் தெருக்களில் மாலை மயங்கி இரவாகிவிட்டால், தெருக்கள் எங்கும் இருட்டுதான். இங்கே மின் கம்பங்கள் கம்பிகளைத் தாங்கி நிற்பதற்கு மட்டும்தான். அதில் விளக்குகள் இல்லை. வீடுகளில் மின்சாரம் உள்ளது. பொது இடங்களில் மற்றும் தெருக்களில் அரசாங்கத்தின் மூலம் மின்விளக்குகள் வசதி செய்து தரப்படவில்லை. குந்த்ராவே இப்படி என்றால் கிராமங்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

அடுத்து நம் கண்ணெதிரே தெரிவது, மக்களின் உடை மற்றும் நடவடிக்கைகள். கொல்லிமலைக் கிராமங்கள் மலைக்கிராமங்களாக இருந்தபோதிலும் உடை விஷயத்தில் ஓரளவு சமவெளிப்பகுதி மக்களைப் போலவே காணப்படுகின்றன. குறிப்பாக பெண்களிடையே நைட்டி எனும் உடை பரவலாகியிருக்கிறது. கொல்லிமலைக் கிராமங்களில் உடை விஷயத்தில் நகரத்தின் சாயல் படர்ந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

மாறாக, குந்த்ராவை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையான பெண்கள் இன்னும் சட்டையணியாமல் (இதில் வயது வித்தியாசமில்லை) சேலையை மட்டுமே ஆடையாகக் கொண்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் சிறுமியர்கள் மாலைவேளைகளில் பள்ளிச் சீருடையையே உடுத்திக் கொண்டிருப்பது அவர்களிடம் உள்ள ஒரே ‘கவுன்’ சீருடை அது மட்டுமே என்பதை தெரிவிக்கிறது.

கண்ணுக்குத் தெரியும் மேற்கூறிய விஷயங்களோடு சற்று உற்றுநோக்கிப் பார்க்கையில் புலனாகும் மிக முக்கியமானதொரு விஷயம் குடிநீர். அதிலும், நாங்கள் சுற்றுப்பயணம் செய்த மாதம், கோடைகாலத்தின் உச்சமாகிய மே மாதம். ஒரு கிராமத்தின் குடிநீர் தேவையை இம்மாதத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். கொல்லிமலைக் கிராமங்களில் நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களுக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட வீடுகளுக்கு ஒரு குழாய் என குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. தினமும் குறைந்தபட்சம் ஒருவேளை கிடைக்கும் இந்நீரின் மூலம் குடிநீரல்லாத ஏனைய அத்தியாவசிய தேவைகளின் ஒரு பகுதியை மக்களால் பூர்த்தி செய்ய முடிகிறது. மற்ற தேவைகளுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளை இவர்கள் சார்ந்துள்ளனர்.

குந்த்ரா வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நாங்கள் கண்டவற்றில் ஒருசில கிராமங்களில் மட்டும் தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டி குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. ஏனைய கிராமங்களில் குழாய் உள்ளது. இவற்றிலிருந்து கிடைக்கும் நீர், அருகிலுள்ள நீர்நிலைகளில் கிடைக்கும் தண்ணீர் மூலம்தான் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அடிக்குழாயில் இருந்து குறிப்பிட்ட அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதையும் பெண்கள் கைகளின்மூலம் அடித்துப் பெற வேண்டும். மேலும் குடும்பத்துக்குத் தேவையான நீரை, பெண்களே நீர் நிலைகளிலிருந்து (பல இடங்களில் இதன் தொலைவு ஒரு கிலோமீட்டருக்கு மேல் உள்ளது) கொண்டுவர வேண்டும். வயல்வெளிகளில் செய்யும் வேலைகளோடு, குடும்ப பராமரிப்புக்காக தண்ணீர் கொண்டுவரும் வேலையும் சேர்ந்து பெண்களின் வேலைப்பளுவை அதிகரிக்கிறது. இவற்றோடு மிக முக்கியமாகச் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் கேள்விக்குறியாக்குகிறது.

மேலே விளக்கிய வேறுபாடுகள் இருந்தாலும் சில விஷயங்களில் கொல்லிமலை மற்றும் குந்த்ராவில் ஏறக்குறைய சமமான முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. அவற்றில் செல்போன்களின் பயன்பாடு முக்கியம். இரண்டு பகுதி கிராமங்களிலும் செல்போன் வசதிகள் மக்களிடையே பரவியுள்ளது. மேலும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் எல்லா கிராமங்களிலும் பரவியுள்ளன. நாங்கள் சென்ற கிராமங்களில் பகல் வேளைகளில் வீட்டில் உள்ளவர்கள் அந்தந்த மொழி நாடகங்களில் மூழ்கியிருந்தனர். இதில் கொல்லிமலை, குந்த்ரா என்ற எந்த வேறுபாடும் இல்லை.

மற்றுமொரு மிக முக்கியமான வளர்ச்சி, மத்திய அரசின் மருத்துவ அவசர உதவி 108-ன் பயன்பாடு. குந்த்ராவில் சுமார் 20 கி.மீ உள்ளடங்கிய ஒரு கிராமத்துக்கு நாங்கள் சென்றபோது ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அழைத்த அரைமணி நேரத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அக்கிராமத்தை வந்தடைந்தது.

எனவே, தனி நபர்களின் மூலம் பெறப்படும் செல்போன் போன்ற ஒருசில காரணிகளைத் தவிர, சாலைவசதி, போக்குவரத்து, வீடுகளின் தன்மை, சுகாதாரமான குடிநீர்,பள்ளி மற்றும் மருத்துவமனை வசதிகள் போன்றவற்றில் ஒடிஸாவின் குந்த்ரா மலைக்கிராமங்கள் தமிழகத்தின் கொல்லிமலைக் கிராமங்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளன. மேற்குறித்த அனைத்து வசதிகளும் அந்தந்த மாநில அரசுகளால் செய்து தரப்பட வேண்டும் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கொல்லிமலையில் கண்ட அனைத்து வசதிகளும் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசுகளால் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய தன்மை குந்த்ரா வட்டார கிராமங்களில் காணப்படவில்லை. இவை மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற திறனை விவரிக்கிறது. மேலும், தென்னிந்திய கிராமங்களில் காணப்படும் அடிப்படை வசதிகளின் முன்னேற்ற நிலை வட இந்திய கிராமங்களில் காணமுடியவில்லை என்னும் ஆய்வாளர்களின் கூற்றை மெய்பிப்பதாகவே நாங்கள் கண்ட காட்சிகள் உள்ளன. தமிழகத்தின் உள்ளடங்கிய மலைக்கிராமம் பெற்றிருக்கும் வசதியை, வட இந்திய மாநிலங்களின் கிராமங்கள் பெற்றிருக்கின்றனவா என்பதும் கேள்விக்குறியே!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel