கொல்கத்தா கொள்ளையன்: சிசிடிவியால் சிக்கியது எப்படி?

Published On:

| By Balaji

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்து வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முதல் புதுச்சேரி வரை இருக்கும் 60 சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீசார் தேடியுள்ளனர்.

சென்னை, ராயப்பேட்டையில் கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 38 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி ஏழு சவரன் நகையைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் தனிப்படை அமைத்து ராயப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். ராயப்பேட்டையில் தொடங்கி 160 கிலோமீட்டர் தூரம் பாண்டி வரையிலான 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த சிசிடிவியில், “ராயப்பேட்டையில் கொள்ளையடித்தவர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு வடபழனி, மதுரவாயல் மேம்பாலம், செங்கல்பட்டு வழியாகச் செல்கிறார், அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு திண்டிவனம், ஆரோவில் வழியாகப் புதுச்சேரியின் நுழைவாயில் முன்பு உள்ள வணிகவரி அலுவலகத்தைக் கடந்து கடைசியாக ராஜீவ் காந்தி சிலை அருகே அக்கார்ட் ஹோட்டலைக் கடந்து மறைவது பதிவாகியுள்ளது. அதன்பிறகு பல இடங்களில் தேடியும் அந்த மர்ம நபர் எங்கே சென்றார் என்ற தகவல் கிடைக்காததால் தமிழக காவல் துறையினர் அவரின் புகைப்படத்தைப் புதுச்சேரி காவல் துறைக்கு அனுப்பி, இந்த வழக்கு பற்றிய விவரம் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டபோது கையும் களவுமாக ஒருவர் புதுச்சேரி காவல்துறையிடம் சிக்கியுள்ளார். தமிழக போலீசார் கொடுத்த புகைப்படத்தில் இருந்தவரும் செயின் பறிப்பில் கைது செய்யப்பட்டவரும் ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சென்னை அழைத்து வந்து அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவரது பெயர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜான்சன் தத் என்பதும், சென்னையில் பல்வேறு பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்ததும், வேலை பார்த்த இடத்துக்கு அருகில் தனியாக உள்ள பெண்கள், வயதானவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

ராயப்பேட்டையில் தொடங்கி புதுச்சேரி வரையில் 60 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த சென்னை போலீசார் ஜான்சன் தத் சென்ற இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை வரை சென்றும் அதன் பிறகு அங்கு எந்த இடத்திலும் சிசிடிவி இல்லாததால் அவரை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. பிறகு புதுச்சேரி போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார். சிசிடிவி கேமராக்களில் ஜான்சன் தத்தை போலீசார் தேடியது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் மூன்றாம் தேதி காலை 9:30 மணிக்குக் கொள்ளையடித்த ஜான்சன் தத், இருசக்கர வாகனத்திலேயே சென்று மதியம் 2:00 மணிக்குப் புதுச்சேரியில் பதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share