கொல்கத்தா ஆணையருக்கு எதிரான மனு: ஆதாரத்தைக் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

public

கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிரான சிபிஐ மனுவை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிபிஐயின் நடவடிக்கையைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் இரண்டாவது நாளாகத் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திருணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கைக் காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதுதொடர்பான வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 3) அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் வந்ததாகக் கூறி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. மாறாக சிபிஐ அதிகாரிகளை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் சிபிஐ நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில டிஜிபி உட்பட உயர் அதிகாரிகளிடம், ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நேற்று (பிப்ரவரி 3) மாலை முதல் மெட்ரோ சேனல் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மம்தா, “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பொதுக் கூட்டம் நடத்தியதையடுத்து அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார். சிபிஐ அமைப்பைத் தவறாக பயன்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

உலகிலேயே கொல்கத்தா காவல் ஆணையர் தான் சிறந்தவர். மேற்கு வங்க காவல் துறை அதிகாரிகளைக் காக்க வேண்டியது எனது பொறுப்பு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மம்தா, உரிய உத்தரவு இல்லாமல் சிபிஐ அதிகாரிகள் எப்படிக் காவல் ஆணையர் வீட்டுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பினார். நாட்டின் அரசியலமைப்பைக் காக்க தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாகவும், நாட்டையும், அரசமைப்பையும் காப்பாற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது தர்ணா போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

இதற்கிடையே ஆயிரக்கணக்கான திருணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மெட்ரோ சேனல் பகுதியில் திரண்டுள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

”நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய ஆவணங்கள் தொடர்பாக ஆணையரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்வதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுபோன்று ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

தொடர்ந்து, சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பலமுறை சம்மன் அனுப்பியும் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. ஆவணங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஆணையர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் துசர் மேத்தா ஆஜராகி, நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் அசாதாராணமான சூழல் நிலவுவதால் இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், ‘கொல்கத்தா காவல் துறை ஆதாரங்களை அழித்துள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா. அப்படி நிரூபித்தால், இந்த விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து வழக்கை நாளை (பிப்ரவரி 5) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகத் துணை நிற்போம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜகவும் பிரதமர் மோடியும் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க காவல் துறை தடுத்து நிறுத்தி கைது செய்து பணி செய்யவிடாததைக் குறித்தும், உபி முதல்வர் வந்த ஹெலிகாப்படரை தரையிறக்க விடாமல் தடுத்ததற்கும் மேற்கு வங்க அரசு மீது இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, ஆகியோர் அடங்கிய பாஜக தலைவர் குழு புகாரளிக்கவுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0