கொரோனா பாதிப்பு-சென்னையில் அதிகம்: காரணம் என்ன?

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிப்ரவரி இரண்டாவது வாரத்தில்தான், தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகித்தனர். எனினும், கொரோனா வைரஸ் சென்னையில் அதிகமாக பரவலாம் என்று மத்திய அரசு எச்சரித்த பிறகுதான், தமிழக அரசு விழித்துக்கொண்டு வேகம் காட்டியதாகக் கூறுகிறார்கள் மருத்துவத் துறை அதிகாரிகள்.

கொரோனா பரவலை தடுக்க அனைத்து ஊர்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும், 17,000 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயாராகி வருவதாகவும் அரசு தரப்பில் தொடர்ந்து சொல்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மாஸ்க், சானிடைசர்கள் போதிய அளவுக்கு வழங்கவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், துணி வாங்கி டைலர் கடைகளில் கொடுத்து, அதனை மூன்று லேயர்கள் வைத்து மாஸ்காக தயாரித்து அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்திவருவதை நாம் நேரடியாகவே காண முடிந்தது.

“கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதோ, அவர்கள் அருகில் செல்லும்போதோ N-95 மாஸ்க் பயன்படுத்துவதுதான் சிறந்தது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. அந்த மாஸ்கையும் 4மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால், நிதியை சேமிக்க N-95 மாஸ்க் வாங்காமல் அரசு தவிர்க்கிறது. நிதியை மிச்சப்படுத்த மருத்துவர்கள் உயிரோடு விளையாடுகிறார்கள்” என்பது மருத்துவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

**கொரோனா சோதனை எப்படி செய்யப்படுகிறது?**

முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களின் தொண்டையிலும், மூக்கிலும் ஸ்வெப் (swap) எடுத்தும், உடலில் ரத்தம் எடுத்தும் பரிசோதனைகள் செய்வதற்கு சென்னை கிண்டி கிங்ஸ் மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதேபோல் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் ஸ்வெப் டெஸ்ட் வசதி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை டெஸ்ட் எடுத்ததில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது, மாவட்டம் ரீதியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று பார்ப்போம். கொரோனா சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை தலைமை அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அங்கு சுமார் 100 பேர் வரை சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நம்பிக்கையானவர்கள். எந்த சூழ்நிலையில் எந்த செய்தியும் வெளியில் கசியாமல் இருக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தகவல் கொடுப்பவர்கள், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிபவர்களுக்கு செல்போன், சிம் கார்டு ஆகியவை புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் 1, ஆலந்தூர் மண்டலத்தில் 1, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூரில் 2, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் 5, தேனாம்பேட்டை மண்டலமான சாந்தோம் 1,அண்ணாநகர் மண்டலம் அரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில், 43ஆயிரத்து 537பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. அதில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் ஈரோடும், மூன்றாவது இடத்தில் சேலமும் உள்ளன. நான்காவது இடத்தில் மதுரை உள்ளது.

சென்னையில் அதிகமாக தொற்று ஏற்பட காரணம் என்னவென்று மருத்துவர் ஒருவரிடம் விசாரித்தோம்…

“சென்னையில் உள்ள சுமார் 17 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலத்திற்கும் சென்றுவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பரவியிருக்கும் நாடுகளிலில் இருந்து பிப்ரவரி மாதத்தில் வந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க விளம்பரம் தேடாமல் பணியாற்றுவதும், மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குச் சிறந்தது என்கிறார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

**எம்.பி.காசி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share