கொரோனா வைரஸின் அச்சம் மருத்துவர்கள், செவிலியர்களையும் விட்டுவைக்கவில்லை என்று கூறுகிறார்கள் மருத்துவ வட்டாரங்களில்.
கொரோனா சமூகப் பரவலில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 11 நாட்களாகிவிட்டன. பிக் பாஸ் வீட்டிற்கு அடைபட்டு கிடப்பது போல நாட்களின் கணக்கை பொதுமக்கள் எண்ணி வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களை கண்டறியவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் பட்டியலை சேகரித்த அரசு, அவர்களின் முகவரிக்குத் தேடிச்சென்று அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் மார்ச் 18ஆம் தேதி கன்னியாகுமரி சென்றுவிட்டு, பணிக்காக 22ஆம் தேதி மீண்டும் அரியலூர் திரும்பியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியும் இருந்ததால், அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, அந்த செவிலியருடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் பணியாற்றும் குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்யும் மெடிக்கல் ஆபிசர், மருந்தாளுனர் உள்ளிட்ட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். மேலும், கன்னியாகுமரியிலுள்ள செவிலியரின் உறவினர்களையும் மருத்துவ குழு தொடர்ச்சியாக கண்காணிப்பில் வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 411 ஆக உள்ளது. இந்த நிலையில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டது, தமிழகத்தில் உள்ள சக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
**வணங்காமுடி**�,