கொடைக்கானல்: பாதரசக் கழிவுப்பிரச்சினை நீடிக்கிறது!

Published On:

| By Balaji

கொடைக்கானலில் முன்னதாக செயல்பட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து கொட்டப்பட்ட பாதரசக்கழிவுகளை, மண்ணிலிருந்து நீக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த தொழிற்சாலையிலிருந்து பாதரசக்கழிவுகள் கொடைக்கானலில் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்பட்டன.

பாதரசம் என்பது மிகவும் கொடிய நச்சு ரசயானப்பொருள் ஆகும். இது மனிதர்கள்,விலங்குகள் மீன்கள் உள்ளிட்ட உயரினங்களின் உடலில் உள்ள துளைகள் மூலமாக உடலில் ஊடுருவிச்சென்று விடும். பாதரசம் கலந்து உணவை சாப்பிடுவதன் மூலமாகவும் அது உடலுக்குள் ஊடுருவிச் சென்று ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கும். இப்படிப்பட்டபாதரசம் கலந்த உணவுகளையும், பாதரசம் ஊடுருவிய மீன்களை சாப்பிட்டதாலும் ஜப்பானில் மினமாட்டா என்ற ஒரு கிராமமே பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் நினைவாக மினமாட்டா நாள் என்று ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மினமாட்டா கொடைக்கானலுக்கும் வரக்கூடாது என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இத்தகைய கொடிய நஞ்சை கொடைக்கானலின் மண்ணில் கொட்டியதால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதனால் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி மூடப்பட்டது.

இதற்கு பின்னர், கம்பெனி கொட்டிய பாதரசக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தொடரப்பட்ட வழக்குகளினாலும் அந்த கம்பெனி கழிவுகளை சொந்த செலவில் அகற்றுவதாக பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனால் பாதரசக்கழிவுகளை அகற்றுவதில் அறிவியல்பூர்வமான முறைகளை கடைப்பிடிக்கவில்லை.

இப்பிரச்சினையில் தலையிட்டு ஆரம்பம்முதல் பாதரசக்கழிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சென்னை தோழமைக்குழுவினர் தற்போது கழிவுகளை அகற்றுதல் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தொழிற்சாலை இருந்த பகுதியில் பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கழிவகற்றும் பணியானது தோல்வியடைந்து விட்டது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்தை பாதிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கான ஒரு திட்டத்தையும் உருவாக்க வலியுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானலில் பாதரசத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியின் மண்ணை மீட்டெடுக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவரின் பணி குறித்த மதீப்பீடு என்ற பெயரில், தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் அந்த அறிக்கை சமரப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், பாதிக்கப்பட்ட மண்ணைக் கழுவி பாதரசத்தை நீக்கும் முறை தோல்வியடைந்து விட்டது. கம்பெனி இது தொடர்பாக அளித்துள்ள தகவல்கள் முழுமையில்லாதவை,முரண்பாடானவை மற்றும் நம்பகத்தகுந்தவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் கம்பெனியானது மண்ணைக் கழுவி பாதரசத்தை அகற்றும் பணியானது ஐரோப்பியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று பிரச்சினையை சமாளித்து வருகிறது

கடந்த பல ஆண்டுகளாகவே பாதரசக் கழிவுப் பிரச்சினை நீடித்து வருகிறது. பாதரசக் கழிவுகளை முறையாக அறிவியல் முறைப்படி நீக்குவது அதிகம் செலவாகும் என்பதால் அதை மேற்கொள்ள கம்பெனி மறுத்து வருகிறது.

முன்னதாக, கர்நாடக இசைக்கலைஞர் டிஎம். கிருஷ்ணா இப்பிரச்சினை குறித்து ஒரு பாடலை பாடி, தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார் அது ஆல்பமாகவும் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

https://minnambalam.com/k/2018/06/30/54�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share