{கொடுமையான காற்று மாசுபாடு: விளிம்பில் டெல்லி!

Published On:

| By Balaji

இன்னும் பத்து நாட்களுக்குள் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகக் கொடுமையான அளவில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குளிர்காலம் வந்தாலே, நாட்டின் தலைநகரான டெல்லி புகைமூட்டத்தில் திணறுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டும், இந்த நிலைமையில் மாற்றமில்லை. கூளங்கள் எரிப்பதாலும், மோசமான வானிலை மாற்றங்களாலும், இன்று (நவம்பர் 1) டெல்லியில் காற்று தர குறியீட்டு எண் மிக வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது 392 என்ற அளவில் உள்ளது. மிகவும் கடுமையான காற்று மாசுபாடு உள்ள இடம் எனும் நிலையை அடைய, இன்னும் 8 புள்ளிகளே உள்ளன.

வயல்களில் கூளங்களை எரித்த காரணத்தினால் உண்டான 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட தூசுகளினால், காற்றில் 12 சதவிகித மாசுபாடு ஏற்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளது டெல்லியிலுள்ள காற்று தர முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு மையம். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவல்களின் படி, ஆனந்த் விகார் எனுமிடத்தில் 2.5 மைக்ரோமீட்டர் அளவுக்கும் குறைவான தூசுகள் 342.6 என்ற அளவில் உள்ளதாகவும், 10 மைக்ரோ மீட்டர் அளவுக்கும் குறைவான அளவுள்ள தூசுகள் 581.16 என்ற அளவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காற்று தர முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு மையமானது, இன்னும் 10 நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகக்கொடுமையாக இருக்குமென்று தெரிவித்துள்ளது. “வட இந்தியாவில் நிலவும் மேற்கத்திய இடையூறுகளால், கிழக்குப் பகுதியில் ஈரப்பதமும் புயலுக்கான அமைவும் ஏற்படுகிறது. இதனால் காற்றின் போக்கு மட்டுப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கூளங்களை எரிப்பது அதிகமாகியுள்ளதாகப் படங்கள் வெளியிட்டுள்ளது நாசா. தற்போது வடமேற்கில் இருந்து காற்று வீசுவதால், டெல்லி – என்சிஆர் பகுதிகள் இன்னும் 10 நாட்களில் அதிகளவில் மாசுபாடு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமையன்று (அக்டோபர் 30), டெல்லியில் காற்றின் தரம் இந்த ஆண்டின் மிக மோசமான அளவை முதன்முதலாகத் தொட்டது. அன்றைய தினம், சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்பாட்டு ஆணையத்தை நியமனம் செய்தது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து, டெல்லியில் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க தனியார் வாகனங்களைத் தடை செய்யும் யோசனை பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் 1 முதல் 10ஆம் தேதி வரை கட்டட வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு. டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையிலுள்ள மாவட்டங்களில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல நிலக்கரி மற்றும் உயிர் எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகளை நவம்பர் 4 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மூடுமாறு கூறியுள்ளது அம்மாநில அரசு.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share