�நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையிலுள்ள ராஜபாதையில் கொடியேற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகள் வரவேற்றனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கொடியை ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனாரோ பங்கேற்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. தமிழ்நாட்டு வாகனத்தில் இடம்பெற்ற தமிழர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் பிரம்மாண்ட சிலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாகனத்திற்கு முன் 30க்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதுபோலவே மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வீரதீர செயலுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.�,