கொடநாடு விவகாரம் குறித்துப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கொடநாடு கொலை தொடர்பாக நான் பேசுவதை நிறுத்த மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்துவரும் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளைத் தாக்கிப் பேசிவருகிறார். கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாகவும் குற்றம்சாட்டி வரும் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி நடத்துவது கொலைகார ஆட்சி என்று விமர்சனம் செய்கிறார்.
இந்நிலையில் கொடநாடு விவகாரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இவ்விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கொடநாடு விவகாரம் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று மாலை ராமநாதபுரத்தில் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் நான் நீதிமன்றத்துக்கு வரத் தயார். நான் பொத்தாம் பொதுவாகப் பேசவில்லை. கொடநாடு விவகாரத்தில் ஆதாரம் இருக்கிறது. கொலைக்கு யாரைப் பயன்படுத்தினார்களோ அவர்களேதான் உண்மையை வெளியே சொன்னார்கள் என்றார்.
“கொடநாட்டில் 2000 கோடி ரூபாய் இருக்கிறது. அதை எடுத்து வந்து தந்தால் 5 கோடி ரூபாய் கமிஷன் தர முடிவெடுத்து அதற்கு ஒரு திட்டம் தீட்டினார்கள். இது மட்டுமின்றி அமைச்சர்கள் சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணை குறித்துப் பதிவு செய்யப்பட்ட பென் டிரைவ் ஒன்றையும் கொடநாட்டிலிருந்து எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜைப் பயன்படுத்தினார்கள் கனகராஜ் மூலம் கேரளாவைச் சேர்ந்த சயன் போன்ற 11 பேர் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். கொடநாடு தொடர்பாக தெஹல்கா ஆசிரியர் மேத்யூ ஆதாரத்துடன் ஊடகத்துக்குப் பேட்டி அளித்தார்” என்று பேசிய ஸ்டாலின், இப்படிப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி பதவியில் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடியை மோடி காப்பாற்றுகிறார் என்றும் விமர்சித்தார். மோடி நாட்டுக்குக் காவலாளியாக இல்லை. எடப்பாடிக்குக் காவலாளியாக இருக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மீனவர்களுக்குப் பிரதமர் மோடி எப்போதுமே காவலாளியாக இல்லை. தமிழ்நாட்டுக்குப் பிரச்சாரத்துக்கு வரும்போது பிரதமர் மோடி, எனது கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.�,