டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையற்ற நிலையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த ரத்தப் பரிசோதனை நிலையத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசும் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சாலை ஓரங்களில் நீர் தேங்கும்படி டயர்கள், பழைய பொருட்கள், குப்பைகளை வீசக் கூடாது. அவ்வாறு டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு ரூ.12.5 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்த ரத்தப் பரிசோதனை நிலையத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (அக். 13) நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஜிடி நகரில் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் தேக்கி வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி நகராட்சி ஆணையர் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் வடிவேலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இது குறித்து, துணை ஆட்சியர் ஆஷா அஜித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த துணை ஆட்சியர் ரத்தப் பரிசோதனை நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே டெங்குவால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டும் நிலையில் டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன.�,