கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட போராளி முகிலன் நேற்று (ஜூலை 10) வள்ளியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர் முகிலன் கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு மேலாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் போராளி முகிலன் கலந்துகொண்டார். போராட்டத்தின்போது, காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து புதுக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலை வரை அடைத்து வைத்திருந்து, பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற முகிலன் ஊருக்குத் திரும்பும்போது கூடங்குளம் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளி முகிலன் நேற்று (ஜூலை 10) திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் நடுவர் முன்பு மதுரை சிறையில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தனியறையில் பல்லாயிரம் கொசுக்களின் மத்தியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதார மற்ற முறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் செய்தியாளர்களிடம் கூறினார். பின்னர் அவர் தன்னுடைய மேலாடை கழற்றி காட்டியபோது, உடல் முழுவதும் கொசு கடித்து ஏற்பட்ட வீக்கம் அவரது பனியன் மீது படிந்திருந்த திட்டு திட்டான ரத்தக் கரையும் தெரிந்தது.
மேலும் பேசிய அவர், ‘கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை நீதிமன்றம் ஒவ்வொரு வாய்தாவிலும் பிணை கொடுப்பதாகக் கூறி வருகிறது. ஆனால், இன்று வரை பிணை கொடுக்கப்படவில்லை. இந்த முறையும் பிணை தொடர்பாகப் பேசியபோது, 24ஆம் தேதி விவரம் தெரிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். தேசத் துரோக வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு, சிறையில் அடைப்பது போன்ற அவலங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது’ எனக் கூறினார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன். கூடங்குளம் அணு உலை போராட்டம், நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.�,