கையெடுத்துக் கும்புடுறோம்: நீதிபதிகள் வேண்டுகோள்!

Published On:

| By Balaji

சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

2012ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி புது பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டடத் தொழிலாளி ரகு என்பவர் மீது வேகமாக வந்த பேருந்து மோதியதில், ரகு உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், ரகுவின் மனைவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 18.88 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, 2015ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்துக் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (மார்ச் 29) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விபத்து நிகழ்ந்தபோது ரகுவின் மனைவி கருவுற்றிருந்தார். அவரது பெண் குழந்தைக்குத் தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, இழப்பீட்டு தொகையை 25.30 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டனர்.

இந்தத் தொகையை நான்கு வாரங்களில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும், வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால், அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது என்றனர்.

குடி போதையிலும், மொபைலில் பேசிக்கொண்டும் வாகனங்கள் ஓட்டும்போது, மூன்றாவது நபர் மட்டுமல்லாமல், வாகன ஓட்டியும் காயமடைகிறார் என்பதால், சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share