தெரு நாய்களுக்கான பிரத்யேக சரணாலயத்தை அமைக்கும் திட்டம் குறித்து திட்டமிட்டு வருவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரளாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏராளமான தெரு நாய்கள் கடித்ததால் சிலுவம்மா என்ற மூதாட்டி பலியானார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தாய்சே என்ற பெண்ணும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மக்கள் நாய்களைக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தனர். அதன்படி, நாய்களைக் கொல்ல பல வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களைக் கொல்வதை தவிர வேறு வழி இல்லையா என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 10) நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் எம்.எம்.சாந்த நாகுகௌடர் ஆகியோர் முன்பு கேரள அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதாடினார். தெரு நாய்களுக்கென தனியாக சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்துக்கும், 2-3 ஏக்கர் விவசாய நிலம் வேண்டும். பல மாநிலங்கள் நாய்களுக்கு இருப்பிடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், இந்தத் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி அதிகரித்துவரும் நாய்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை தெரு நாய் கடியிலிருந்து குடிமக்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கேரள அரசின் முடிவைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.�,