கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று (நவம்பர் 23) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு முறையாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தானே, வர்தா, ஒக்கி என பல புயல் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் தமிழக அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட பாதிப்பை வந்து பார்க்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
”கஜா புயல் தாக்கி 8 நாட்களுக்கு மேல் ஆகியும்கூட மத்திய அரசு சார்பில் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ ஏன் இங்கு வரவில்லை? தமிழகமும் இந்தியாவில்தானே இருக்கிறது? இல்லை வேற எங்கேயும் இருக்கிறதா? கேரளாவுக்கு ஒரு நிலை தமிழகத்துக்கு ஒரு நிலையா? ஏன் மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரமாட்டார்களா, தமிழக அரசு அடிமை அரசாக இருக்கிறது” என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
”மத்திய அரசு பணம் கொடுத்தால் தான் மாநில அரசு மீட்பு பணியில் ஈடுபடுமா, கேரள வெள்ள பாதிப்பின் போது உடனே ரூ.500 கோடியை அறிவித்த பிரதமர் தமிழகத்துக்கு ஏன் இன்னும் வழங்கவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார்.
டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று கூறிய அன்புமணி, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் வேதனைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், இழப்பீடு வழங்க வேண்டும், தென்னைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.15 ஆயிரம் கோடி கேட்டுள்ளார். ஆனால் மத்திய குழு வந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு ரூ.150 கோடி தான் கிடைக்குமே தவிர அதற்கு அதிகமாக மத்திய அரசு கொடுக்காது. ஏனென்றால் ஒக்கி, வர்தா பாதிப்பின் போதும் மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை என்று பொய் சொல்கிறார். விவசாயிகள் தற்கொலையை கணக்கில் சேர்க்க கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார். ”தேசிய பேரிடர் ஆணையம், மாநில பேரிடர் ஆணையம் என இரண்டு ஆணையங்கள் இருக்கின்றன. தேசிய ஆணையத்துக்குப் பிரதமர் தலைவர், மாநில ஆணையத்துக்கு முதல்வர் தலைவர். ஒரு பேரிடருக்குப் பிந்தைய நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. பேரிடர் ஆணையத்தில் இருந்து ஒருவர் கூட அங்கு வந்து பார்வையிடவில்லை” என்று விமர்சித்தார்.�,