கேரளாவில் முழுஅடைப்பு : தமிழக பேருந்துகள் நிறுத்தம்!

Published On:

| By Balaji

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதையடுத்து, இன்று (பிப்ரவரி 18) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரள காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸில் பணியாற்றி வந்த கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நேற்று அடித்துக்கொல்லப்பட்டனர். காசர்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மீண்டும் பெரியா கிராமத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த போது எஸ்யுவி காரில் வந்த மர்ம நபர்கள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”காசர்கோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய மாட்டோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”அரசியல் காரணத்துக்காக இருவரையும் திட்டமிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் கொன்றுள்ளனர். இதற்கு அக்கட்சி உரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று (பிப்ரவரி 18) அறிவித்தபடி, இளைஞர் காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரளா அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பேருந்துகள், போடிமெட்டு, களியாக்கவிளை போன்ற, எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share