கொத்தடிமை தொழிலாளர்கள்: காவல் துறைக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தாமலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமலும் உள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, தமிழக டிஜிபிக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பிக்களுக்கும் உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ரோசன் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.செல்வம், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உலகளவில் 4.58 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாகவும், அதில் இந்தியாவில் 1.83 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் 2016ஆம் ஆண்டு சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டிய மனுதாரர், கொத்தடிமைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்ட போதிலும், 32 வழக்குகளில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

இதை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டனர்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel