கூவாகம் அழகி போட்டி: சென்னையை சேர்ந்த 3 பேர் மிஸ் திருநங்கைகள்

Published On:

| By admin

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்வார்கள்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். மேலும் மிஸ் திருநங்கை மற்றும் மிஸ் கூவாகம் என்ற திருநங்கைகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முதலில் நடனப் போட்டிகள், பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் மிஸ் திருநங்கை அழகிப் போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளில் மேடையில் தோன்றி நடந்து வந்தனர்.

போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2ஆவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த 2ஆவது சுற்றின் முடிவில் 5 பேர் 3ஆவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுமிதா 2ஆவது இடத்தையும், எல்சா 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு 15 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 2ஆவது இடத்தை பிடித்த மதுமிதாவுக்கு 10 ஆயிரம் ரூபாயும், 3ஆவது இடத்தை பிடித்த எல்சாவுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share