>கூத்து வாத்தியார்கள் – 9

Published On:

| By Balaji

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் – 1

**இரா.சீனிவாசன், மு. ஏழுமலை**

தமிழகத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய தெருக்கூத்துக் கலைக் குறித்த ஆய்வுகள் என்பது தெருக்கூத்துக் கலைஞர்கள் குறித்த ஆய்வாகவே பெரும்பாலும் இன்றுவரை நிகழ்த்தப்பெற்றுள்ளது. ஆனால், ஒரு கலை சார்ந்த ஆய்வு என்பது கலைஞர்கள் அளவில் மட்டுமே நிகழ்த்தப்பெறுவது ஒரு முழுமைப் பெற்ற ஆய்வாகக் கருதவியலாது. ஒரு கலையில் குறிப்பாக நிகழ்த்துக் கலையில் கலைஞனுக்கான நேர்எதிர்நிலை முக்கியத்துவம் பெற்றவர்கள் அந்நிகழ்த்துக் கலைக்குரிய பார்வையாளர்கள். இவ்வாறு முக்கியத்துவம் பெறும் பார்வையாளர்கள் குறித்த ஆய்வு விரிவான நிலையில் நடைபெற்றுள்ளதா? என்ற வினவும் நிலையில் இல்லை என்ற பதில் பெறுவதற்கான ஆய்வுச்சூழலே உள்ளதை காண முடிகிறது.

ஒவ்வொரு நிகழ்த்துக்கலைக் குறித்தும் விரிவானதொரு பதிவை செய்வதற்கான தரவுகள் பார்வையாளர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மெய்மையை உணரும் உணர்த்தும் முயற்சியில்தான் தெருக்கூத்துக் கலைக்குரிய தேர்ந்த பார்வையாளர்களை அடையாளம்கண்டு, தெருக்கூத்துக் கலைமீதான அவர்களின் நுட்பமான அறிவை பதிவு செய்யும் நோக்கில் சில தெருக்கூத்துப் பார்வையாளர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது. இவ்வாறு நேர்காணல் செய்யப்பட்ட பார்வையாளர்களில் க.சீ. இரவி என்னும் பார்வையாளரும் ஒருவர். இவரின் சிறப்பு என்னவெனில் பல கூத்துக் குழுக்களின் கூத்துகளைக் கண்டிருப்பினும் தன்னை ஒரு குழுவுக்கான பார்வையாளனாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கான தகுதியும் உள்ளது. இவ்வாறு தன்னை ஒரு குறிப்பிட்ட தெருக்கூத்துக் குழுவுக்கான பர்வையாளனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு உருவான சூழல் பற்றி நேர்காணலில் விரிவான நிலையில் பகிர்ந்துகொண்டார். இவ்வாறு பகிர்ந்துகொண்டதில் உள்ள பல பரிமாணங்களைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து மன்றம் என்னும் குழுவின் கூத்துகளைக் காண்பதற்காக நாங்கள் சென்றபொழுது பொதுவான பார்வையாளராகத்தான் எங்களுக்கு முதலில் அறிமுகமானவர்தான் க.சீ. இரவி. இவற்றைத் தொடர்ந்து இக்குழு சார்ந்த கலைஞர்களிடம் பேசும்போது குழுவினர் ஒவ்வொருவரும் இவருடைய பெயரை ஏதேனும் ஒரு நிலையில் உச்சரித்தனர். ஒரு நிலையில் இரவி என்பவர் யார்? என்று இக்குழுவில் சிறப்பான கலைஞராக விளங்கக் கூடிய தேவன் ஐயா அவர்களிடம் கேட்டபொழுது எங்கள் குழுவின் அனைத்துக் கூத்துகளையும் கண்டவர். எங்கள் குழுவின் வளர்ச்சிக்காக அனைத்து உதவிகளையும் செய்பவர் என அவரைப் பற்றிக் கூறினார். இந்நிகழ்வுக்குப் பிறகுதான் இவரை சந்திக்க வேண்டும், இவரோடு நோர்காணல் செய்து இக்குழு குறித்த பரிணாமங்களையும், பரிமாணங்களையும் ஒரு பார்வையாளர் நிலையிலிருந்து பதிவு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டோம். இத்திட்டத்தின்படி 11.01.2016 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுருட்டல் என்னும் கிராமத்திற்குச் சென்று க.சீ. இரவி அவர்களை நேர்காணல் செய்தோம்.

க.சீ. இரவி அவர்கள் முதலில் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். அத்தகைய அறிமுகத்தின் மூலம், தாய் பெயர் சந்திரா, தந்தை பெயர் சீதாராமன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), அண்ணன் வீரராகவன் (தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்) என்பதை அறிய முடிந்தது. இவற்றோடு 2002இல் மஞ்சு என்பவரோடு திருமணமாகி சக்திபிரியா, சரவணன், மகாலட்சுமி என்னும் மூன்று மக்கள் செல்வங்களோடு, தொழில்நுட்பக் கல்வி கற்று, ஒரு தனியார் கல்வி நிறுவனமொன்றில் முதல்வர் பதவி வகித்து வாழ்ந்துவருகிறார் என்பதை அறிந்தது மகிழ்ச்சி.

க.சீ. இரவி அவர்களின் மேற்கண்ட குடும்ப பின்புலமும், தங்கள் முன்னோர் பற்றி குறிப்பிடும்பொழுது, தன் முன்னோர்கள் கிராம வரவு செலவு கணக்கை பார்க்கும் கணக்குப் பிள்ளையாக விளங்கியவர்கள் என்று கூறியதும் மிக முக்கியமான தரவாகக் கொள்ளலாம். ஏனெனில், தெருக்கூத்துக் கலையைப் பற்றி பொத்தாம் பொதுவான கருத்தொன்று உண்டு. அது என்னவெனில், தெருக்கூத்துக் கலை படிக்காத பாமரர்களுக்குரிய கலை என்பதுதான். ஆனால் நாம் காணும் பார்வையாளர்களில் பெரும்பான்மையோர் நன்கு கல்வி கற்று மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களும் இருப்பதை காண முடிந்தது. இந்நிலை பாமரர்களுக்கான கலை என்ற கருத்தை பொய்ப்பிக்கும் நிலையாக உள்ளதை காண முடிகிறது.

தன் குடும்ப நிலையை பகிர்ந்துகொண்ட அவரிடம் தாங்கள் நன்கு படித்தும், செல்வச் செழிப்பும், சமூக மதிப்பும் குறைவிலாத குடும்பப் பின்னனியும் கொண்டிருக்கும் உங்களுக்கு தெருக்கூத்துக் கலை மீது ஆர்வம் வந்த பின்புலத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா? என்று கேட்டோம். இவ்வினா முடிந்தவுடன் தன் உரையாடலைத் மிகுந்த முக மலர்ச்சியோடு தொடர்ந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திரௌபதியம்மன் கோயில்களும், தெருக்கூத்துக் குழுக்களும் நிறைந்த பகுதி. இவைமட்டுமின்றி ஒரு ஆண்டில் எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் சித்திரை தொடங்கி ஆவணி மாதம் வரை அம்மன் விழாக்கள் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் பெருமாள் விழா நடைபெறும். ஐப்பசி மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை கார்த்திகை தீபம், காணும் பொங்கல் முதலான நாட்களில் அம்மன் வழிபாடு முதலானவை நடைபெறும். இந்த நாட்களிலும் தெருக்கூத்துக் கலை ஊரில் நிகழ்த்தப்பெறும். இவ்வழிபாடுகளில் பெரும்பான்மையாக தெருக்கூத்துக் கலை நிகழ்த்தப்பெறும். அம்மன் வழிபாடுகள் பொறுத்தவரையில் இவை மட்டுமின்றி, எங்கள் மாசி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பூனைத்தாங்கல், கீழ் நாயக்கன்பட்டி, மாமண்டூர், தர்மாபுரம், தூசி, உத்திரமேரூர், கலக்காட்டூர், காஞ்சிபுரம் முதலான ஊர்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில்களில் 18 நாட்கள் மகாபாரத பிரசங்கமும் 10 நாட்கள் தெருக்கூத்துக் கலையும் நிகழ்த்தப்பெறும். பெரும்பாலான விழாக்களின் செலவில் ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை தெருக்கூத்துக் கலை நிகழ்த்துதலுக்காக செலவு செய்வது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய வளமான சூழல்தான் என்னை தெருக்கூத்துக் கலையை தொடர்ந்து காணும் பார்வையாளனாக உருவாக்கியது என்று தன்னுள் நீண்ட நாளாய் சுமந்திருக்கும் தன் இன்பமான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டதைப் போன்று எங்களோடு ஆற்றொழுக்காக பகிர்ந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியோடு நேர்காணலைத் தொடரச் செய்தது.

மேலும், தெருக்கூத்துக் கலை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் ஆர்மோனியம் (தாய்), மிருதங்கம் (தந்தை), முகவீணை, தாளம் ஆகிய இசைக்கருவிகளின் இசை என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இத்தகைய தாக்கம் மேலும் என்னை தெருக்கூத்துக் கலை நிகழ்த்துதலோடு தொடர்ந்து இயங்கச் செய்தது என்றும் பகிர்ந்துகொண்டார்.

க.சீ. இரவி அவர்கள் தெருக்கூத்துக் கலை மீது உருவான தன்னுடைய ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட நிலை, அதனால் உருவான இன்பம் முதலானவற்றை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களாக எண்ணுகிறார். அவற்றைப் பற்றி தொடர்ந்து தன் உரையாடலில் பதிவு செய்தார்.

தெருக்கூத்துக் கலை மீதான ஆர்வம் என்பது இன்றோ நேற்றோ அல்லது என்னுடைய வயதின் இடைப்பட்ட காலத்திலோ வந்ததில்லை. எனக்கு தற்பொழுது 37 வயதாகிறது. நான் ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலேயே படித்தேன். அப்பொழுதே ஊர்விட்டு ஊர்ச் சென்று கூத்துப் பார்க்கும் ஆர்வம் உடையவன். நான் சிறுவயதிலேயே பல குழுக்களின் கூத்துக்களை கண்டிருப்பினும், எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள குண்டையார் தண்டலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் தெருக்கூத்து மன்றம் என்னும் பெயரில் இயங்கிவரும் தெருக்கூத்துக் குழுவினர் நிகழ்த்தும் கூத்துக்கள்மீது தீராத ஆர்வம் உடையவன். அதானால் ஒரு குழுவுக்கான பார்வையாளனாக சிறுவயதிலேயே உருவாக ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் வரை இந்த கூத்துக் குழுவினர் அனைவரிடமும் சென்று பேச வேண்டும் என்று மனதில் நினைப்பேன் சிறு அச்சத்தால் அந்த முயற்சியை கைவிடுவேன். குறிப்பாக இக்குழுவில் உள்ள தேவன் என்னும் மகா கலைஞனின் நிகழ்த்துதல்மீது மிகுந்த காதல் உருவானது. இவரையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை அதற்கான சூழல் அமையவில்லை.

நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு படிப்பதற்காக எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தேன். அப்பொழுதுதான் தேவன் ஐயாவை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக உருவானது. ஒருநாள் பள்ளி முடித்து வந்தவுடன் என்னுடைய புத்தகப் பையை வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக இரண்டு கீலோமீட்டர் தொலைவு உள்ள குண்டையார் தண்டலம் கிராமத்திற்கு ஓடி தேவன் ஐயா அவர்களின் வீட்டைக் கண்டுபிடித்து அவரை சந்தித்தேன். கூத்துக் களத்தில் பலமுறை என்னைப் பார்த்திருக்கிறார். ஆனாலும் நீ யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார். சுருட்டல் சீதாராமன் வாத்தியார் மகன் என்றும், சும்மாதான் வந்தேன் என்றும் கூறினேன். அவரும் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு அன்பாக பேசுவார். அவர் கூத்துப் புத்தகங்களை படிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். கூத்து வேடமணிந்த நிழற்படங்களை கேட்பேன் அவரும் எடுத்துக் கொடுப்பார். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு இரவு 7.00 மணியானதும் நாளைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு எங்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். இப்படியே ஒவ்வொரு நாளும் செல்வேன். நான் மிகுந்த ஆர்வத்தோடு வருவதை அறிந்துகொண்ட தேவன் ஐயா என்னிடம் மிக அன்பாகப் பழக ஆரம்பித்தார். கூத்துப் பாடல்களையும் பாடிக் கற்றுக்கொடுப்பார். ஒருமுறை அவர் பாடினாலே நானும் திருப்பி பாடிவிடுவேன். இவற்றைக் கண்டு மகிழ்ச்சியடைவார். தேவன் ஐயா வீட்டிற்குச் செல்ல எங்கள் வீட்டு மிதிவண்டியையும் என் தந்தை அளிப்பது இல்லை. அவர் வீட்டிற்கு நடப்பதை, ஓடுவதை மிக இன்பமாக நினைப்பேன். எங்கள் வீட்டில் யாரிடமும் தொடக்கத்தில் தேவன் ஐயா வீட்டிற்குச் செல்வதை கூறுவதில்லை. எங்கேயோ விளையாடிக் கொண்டிருப்பான் என்றுதான் நினைப்பார்கள். சற்று வளர்ந்த பெரியவனான பின்புதான் என் அம்மாவிடம் கூறிவிட்டு செல்லத் தொடங்கினேன்.

பள்ளிப் படிப்பு முடித்து தொழிற்கல்வி படிக்கும் காலத்திலும் தேவன் ஐயாவுடனான பழக்கம் தொடர்ந்தது. அப்பொழுது மிதிவண்டி எடுத்துக்கொண்டு செல்வேன். என்னுடைய தாய் மற்றும் தந்தை அனைவரும் இந்த வயதில் கூத்துப் பாடல்களை பாடிக்கொண்டு திரிகிறான் பார் என்று திட்டுவார்கள். என்னுடைய நண்பர்கள் சினிமா பாடல்களைப் பாடுவார்கள். ஆனால், நான் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன். இதேப்போன்று என் நண்பர்கள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். நான் தெருக்கூத்துப் பாடல்களுக்க நடனம் ஆடிக்கொண்டும், அடவு பயிற்சி செய்துகொண்டும், கிறிக்கி அடித்துக்கொண்டும் இருப்பேன். எங்கள் வீட்டின் எதிரில் தெருவிலும் கிறிக்கி அடிப்பேன். நானும் வளர வளர என்னுடனேயே தெருக்கூத்துக் கலை’ குறித்த ஆர்வமும் வளர்ந்துகொண்டே வந்தது. என்னுடைய ஆர்வத்தை தன்னடைய பாடல்களாலும் ஆடல்களாலும் வசனங்களாலும் ஒப்பனைகளாலும் வளர்த்தவர் தேவன் ஐயாதான். எங்கள் வீட்டில் உள்ளவர்களும் திட்டுவார்கள். இப்படித்தான் அவருக்கும் எனக்குமான நெருக்கம் உருவாகியும் வளரவும் ஆரம்பித்தது.

(அடுத்த பகுதி 1 மணி பதிப்பில்)

கூத்துகள் – அருச்சுனன் தவம், ராஜசூயயாகம், கருமாரி பிறப்பு.

மாரியம்மன் தெருக்கூத்து நாடகக் குழு

படங்கள் – சே. சுந்தரமூர்த்தி, மு. ஏழுமலை

[கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்](https://minnambalam.com/k/2017/10/29/1509281289)

[திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்](https://minnambalam.com/k/2017/11/05/1509885428)

[கமலக்கண்ணன் வாத்தியார்](https://minnambalam.com/k/2017/11/12/1510491087)

[குமாரசாமித் தம்பிரான்](https://minnambalam.com/k/2017/11/20/1511183496)

[திருவேங்கடம் வாத்தியார்](https://minnambalam.com/k/2017/11/26/1511634621)

[தங்கவேல் ஆசிரியர்](https://minnambalam.com/k/2017/12/10/1512910731)

[மண்ணு வாத்தியார்](https://minnambalam.com/k/2017/12/17/1513514167)

[த.ரங்கசாமி வித்துவான்](https://minnambalam.com/k/2017/12/24/1514139435)

[ஜெயராமன் வாத்தியார்](https://minnambalam.com/k/2017/12/31/1514744161)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel