காங்கிரஸுடன் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தியாக வேண்டுமென்று நாடு முழுவதும் ஒருங்கிணைந்திருக்கிற பிராந்திய கட்சிகளில் ஆம் ஆத்மியும் ஒன்று. அதனாலேயே, காங்கிரஸை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியில் அமர்ந்த ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி வைக்க விரும்பியது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை ஏழு தொகுதிகளிலும் பாஜகவை வீழ்த்த சரிசமமாகத் தொகுதிகளைப் பங்கிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று காங்கிரஸிடம் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளும் அதை உறுதி செய்த நிலையில், டெல்லியில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பால் பேச்சுவார்த்தை முடிவை எட்டாமல் முறிந்தது.
இதையடுத்து டெல்லியில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மார்ச் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். எஞ்சிய ஒரு தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் ஹரியானாவில் கூட்டணி வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹரியானாவில் மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் ஜனநாய ஜனதா கட்சி மூன்றும் இணைந்தால் பாஜக ஹரியானாவில் ஒரு தொகுதியைக் கூட வெல்லாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (மார்ச் 13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் மேலும் கூறுகையில், “இரட்டையர்கள் இருவரும் (பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்) இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவது மிகவும் அத்தியாவசியமானது. இந்த நாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று, மோடி பக்தர்கள். அவர்கள் மோடிக்கு வாக்களிக்க விரும்புபவர்கள். மற்றொன்று, மோடியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மோடியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருக்கிறோம். ஆனால் பிரிந்து இருக்கிறோம். இந்த எண்ணம் கொண்டவர்கள் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். இந்தப் பிரிவுகள் மோடியும் அமித் ஷாவும் வெற்றி பெறவே பயன்படும்” என்றார்.
மேலும், “ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி வைத்து ஹரியானாவில் தேர்தலை எதிர்கொண்டால் 10 தொகுதிகளிலும் பாஜகவை வீழ்த்த முடியும். மோடி மற்றும் அமித் ஷாவை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கு இது பயன்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நான் முன்மொழிகிறேன்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி நேற்று சென்னையில், “எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜவைத் தோற்கடிக்க முன்வந்துள்ளன” என்று கூறியிருந்தார். இதற்கு முந்தைய தினம், ”பாஜகவைத் தோற்கடிக்க அரசியல் கட்சிகள் என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறியிருந்தார். இதனையடுத்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெளிப்படையாக அறிவித்துள்ள கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.�,