கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டி: வழக்கு தள்ளுபடி!

Published On:

| By Balaji

கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உறுப்பினராக இல்லாத ஒரு கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சியைச் சேர்ந்த நபர் தேர்தலில் போட்டியிடக்கூடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார் எனவும், அந்த முடிவை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாத தற்போதைய நிலையில் இந்த வழக்கின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், கூட்டணியில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும், திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel