கும்பகோணம் மாநகர பகுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் தெருவோர வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் வணிகக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர கடைகள், தட்டு கூடைகள், தள்ளுவண்டி, சைக்கிள் மற்றும் வாகனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு வசூல் செய்யும் உரிமை தனிநபருக்கு டெண்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தரைக் கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தினசரி கட்டணமாக ரூ.10 வசூல் செய்து வந்ததை அதிரடியாக ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு இனங்களுக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
வியாபாரத்தை முறைப்படுத்தவும், வியாபாரிகளின் வியாபாரத்தை பாதுகாக்கவும், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வியாபாரிகளுக்கு ஆண்டு கட்டணம், வியாபார தன்மை, வியாபார பகுதி, வியாபார முறை இவற்றை கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கட்டணம் வசூலிப்பதும், ஒப்பந்தப்புள்ளி விடுவதும் சாலையோர வியாபாரிகள் சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே கும்பகோணம் மாநகராட்சியில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
**ராஜ்**
.