}கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டிக்டாக் நீக்கம்!

public

சென்னை உயர் நீதிமன்றக் கிளை விதித்த உத்தரவையடுத்து, பிளேஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

சீனாவைச் சேர்ந்த பைடெடன்ஸ் டெக்னாலஜி எனும் நிறுவனம் டிக்டாக் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. 2016 செப்டம்பர் மாதம் முதல், இது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள், பெரியோர்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவராலும் டிக்டாக் பயன்படுத்தப்படுகிறது.

இச்செயலியைப் பயன்படுத்தியதால் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்றும், இதனால் சமூகத்தில் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன என்றும் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 3ஆம் தேதியன்று இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, டிக்டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென்று தெரிவித்திருந்தது.

நேற்று (ஏப்ரல் 16) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிக்டாக் செயலியில் இருந்து பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார் டிக்டாக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர். நீதிமன்றத் தடையால் டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் மனுதாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தனர். டிக்டாக் செயலி மீதான மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தொழில்நுட்பத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையடுத்து ப்ளேஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை நீக்கம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். டிக்டாக் தடை தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை கடிதம் அனுப்பியதாகவும், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சட்டத்துக்குத் தகுந்தவாறு தாங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இது பற்றி எந்தப் பதிலும் வெளியிடவில்லை. ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கினாலும், மற்ற தளங்களில் டிக்டாக் செயலி பயன்பாடு தொடர்ந்து வருகிறது.

நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக, சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்தது பைடெடன்ஸ் டெக்னாலஜி நிர்வாகம். இந்த வழக்கில் விரைவில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை வாதிட அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *