குழந்தைகள் மீதான நேசிப்பும், போக்சோ சட்ட அமலாக்கமும்!

public

– கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

குழந்தைகள் மீது அன்பு செலுத்தாத மனிதர்களே இருக்க மாட்டார்கள், அதுபோல குழந்தைகள் அன்பு செலுத்தாத உயிர்களும் இருக்காது. கள்ளம் கபடமற்ற அத்தனை பேரையும் குழந்தை மனசுக்காரர்கள் என்று போற்றுகிறோம். அந்தக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்கொடுமைகள், வல்லுறவுகள் அதிகரிக்கும் போது நம் மனம் பதைபதைத்துப் போகிறது.

டெல்லி நிர்பயா வழக்கு, உத்திரப்பிரதேசம் உன்னாவ் வழக்கு, காஷ்மீர் கத்துவா சிறுமி வழக்கு என்று, ஒருசில வழக்குகள் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை சிறுமி வழக்கு, அயனாவரம் சிறுமி வழக்கு, குன்றத்தூர் சிறுமி வழக்கு, திருவைகுண்டம் சிறுமி வழக்கு, அரியலூர் மாணவி வழக்கு, பொள்ளாச்சி, விழுப்புரம் வன்கொடுமைகள் என சில வழக்குகள் பொதுக் கவனம் பெறுகிறது. மற்ற வழக்குகளும், சம்பவங்களும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடுகிறது.

**போக்சோ சட்டம் எதற்காக?**

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும், அம்சங்களும் இருந்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டத்தான் தனியாக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் -2012 ( The Protection of Children from Sexual Offenses (POCSO) Act -2012 ) என்பது, இந்தியாவில் பாலின வித்தியாசமின்றி 18 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, அந்தரங்க உறுப்புகளை தொடுவது, தொடவைப்பது, பாலியல் சீண்டல், பாலியல் செய்கை, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் எடுப்பது, அப்படங்களை விற்பது குற்றம் என்கிறது போக்சோ சட்டம். அதுமட்டுமில்லை குற்றம் செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவி செய்வது, குற்றத்தை மறைப்பதுவும் குற்றம்.

முப்பது நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்ய வேண்டும், சிறப்பு நீதிமன்றங்களில் 2 மாதம் முதல் 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும். மேல்முறையீடு செய்தால் அடுத்த ஆறு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். வாக்குமூலம் பதிவு செய்வது, விசாரணை நடத்துவது அனைத்திலும் குழந்தைகள் நலன் முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிறது சட்டம்.

குழந்தைகளின் இருப்பிடத்திற்கே சென்று, அல்லது விரும்பும் இடத்திற்குச் சென்று, சார்பு ஆய்வாளர் தகுதிக்கு குறையாத அலுவலர் விசாரணை செய்யலாம், அப்போது சீருடை அணியக் கூடாது. இரவு நேரத்தில் விசாரிக்கக் கூடாது, காவல்நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. குழந்தை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுக்க வேண்டும். குழந்தையின் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனையின் போது கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடனிருக்க வேண்டும். குழந்தைகளை சங்கடப்படுத்தும் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளை கேட்கக் கூடாது.

காவல்துறை, பாதுகாப்புப்படை, ராணுவம், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற பாதுகாவலர்களே, நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும் போது கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று போக்சோ சட்டம் சொல்கிறது.

போக்சோ சட்டத்தின்படி வழக்குப் பதியப்பட்டால், குழந்தைகளின் அடையாளத்தையோ, பெயரையோ, இருப்பிடத்தையோ வெளிப்படுத்தக் கூடாதென்று உச்சநீதிமன்றம் (WP (Civil) No. 565/2012) உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் (WP (MD) No 6238/2019) உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறைத் தலைவர் (DGP) 16.03.2019 அன்றும், தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் 03.07.2019 அன்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள். இதனை மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை என்று சட்டம் சொல்கிறது.

**அலட்சிய அதிகாரிகளுக்கும் தண்டனை!**

போக்சோ சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் புகார் கொடுத்த மனுதாரர் குற்றத்தை நிரூபிக்க வேண்டியதில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்தான் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். வழக்கு தாக்கல் செய்யப்பட்டவுடன் சிறப்பு நீதிமன்றம் புகார் கொடுத்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாம். குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால் கூட, வழக்கின் தன்மை கருதி, பாதிக்கப்பட்டவரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 30 நாட்களுக்குள் மாநில அரசு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை நாடவும் தூண்டுகோலாக அமையும் என்ற நோக்கத்தில் போக்சோ சட்டத்தில் இத்தகு அம்சங்களை சேர்த்துள்ளார்கள்.

வழக்கை அலட்சியமாக விசாரிக்கும் விசாரணை அலுவலரையும் இச்சட்டத்தில் தண்டிக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டதால், பெரம்பலூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் சித்ராதேவி பதவி நீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி சிட்லிங் சிறுமி வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்தவரின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு மீண்டும் பணிவழங்கப்பட்டது.

வழக்குகள் நடைபெறுவதை மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கண்காணிப்பு செய்ய வேண்டும். ஆனால் நடைமுறையில் குழந்தைகள் ஆணையத்துக்கு தேவையான நிதியும், மனித வளமும், கட்டமைப்பு வசதிகளும் மிகமிகக் குறைவு. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென சட்டம் சொல்கிறது, நடைமுறையில் மகிளா நீதிமன்றங்கள்தான் சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுகின்றன.

**வழக்குகள் விவரம்**

தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டில் 1065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 73 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 1544, தீர்ப்புகள் பெற்றது 133.

2017 ஆம் ஆண்டில் பாலியல் வல்லுறவு 1154, பாலியல் வன்கொடுமை 433 என 1587 வழக்குகள் பதியப்பட்டன. 2018 இல் பாலியல் வல்லுறவு வழக்குகள் 1464, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 581 என 2045 வழக்குகள் பதியப்பட்டன.

சென்னை மாநகரில் மட்டும் 2017 ஆம் ஆண்டில் 141 வழக்குகள் போக்சோ சட்டத்தின் படி பதியப்பட்டன, 5 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் பதியப்பட்ட வழக்குகள் 218 தீர்ப்பு கிடைத்தது 4 வழக்குகள். 2019 ஆம் ஆண்டில் 131 வழக்குகள் பதியப்பட்டன. நிலுவையில் இருக்கும் எந்த வழக்கிலும் 2019 ஜூலை 20 வரை தீர்ப்புகள் வழங்கப்படவில்லை.

டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறுவதாக தேசிய குற்றப்பிரிவுகள் ஆவணக் காப்பகம் (NCRB) தகவல் வெளியிட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்.சி.ஆர்.பி. தெரிவிக்கிறது. தண்டனை பெற்றுத்தரும் மாநிலங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், தமிழ்நாடு முதன்மையாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விழுப்புரம், சென்னை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் அதிக வழக்குகள் பதிவாகின்றன.

பொதுநல வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தகவல் சொல்கிறது, 01.01.2019 முதல் 30.06.2019 வரை பதியப்பட்ட 24212 போக்சோ வழக்குகளில், 911 வழக்குகள் தள்ளுபடி ஆகிவிட்டன என்று. சண்டிகர் நகரில் 29 வழக்குகள் பதியப்பட்டு, 12 தள்ளுபடி ஆகியுள்ளன. சட்டீஸ்கரில் 1285 வழக்குகளில், 133 தள்ளுபடி ஆகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 2389 வழக்குகளில் 247 தள்ளுபடி ஆகிவிட்டன. அதுவே தமிழ்நாட்டில் 1043 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, 22 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

**நிர்வாகக் கட்டமைப்பில் சமரசமா?**

வழக்குகளில் தாமதமாக தீர்ப்பு கிடைப்பது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது, வழக்குகள் தள்ளுபடி ஆவது, மக்கள் மனதில், போக்சோ சட்டத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிடும். பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக சிலரால், பரப்புரை செய்யப்படுவதுபோல செய்வது போல, போக்சோ சட்டத்தின் மீதும் விமர்சனங்கள் எழுந்து விடும். குடிமக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவது அரசின் கடமை.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்ற போக்சோ வழக்கு கண்காணிப்புக்குழு, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சமூக நல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம், இளஞ்சிறார் நீதிக்குழுமம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், 1098 சைல்ட் லைன், கல்வி அலுவலர்கள், சிறப்பு சிறார் காவல் அலகு, மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இத்தனை அரசு அமைப்புகள், அரசு அலுவலர்கள் இருக்கும் போதே, குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நடக்கிறது, வழக்கே பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசப்படுகிறது, விசாரணை தாமதமாகிறது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பிறழ் சாட்சியாக மாறுகிறார்கள். வழக்குகள் தள்ளுபடி ஆகின்றன. தீர்ப்புகள் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படுகின்றன.

அப்படியென்றால் நமது நிர்வாக கட்டமைப்பில் எங்கோ சமரசம் செய்து கொள்கிறோம், நமது கண்களின் முன்பு குழந்தைகளின் முகம் தெரிவதில்லை, குடும்பச் சூழல், சாதி, மதக் கட்டுப்பாடுகள், பழமைவாதங்கள், ஆதிக்க மனோபாவம் கண்களை மறைக்கின்றன. அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் ஆதிக்கம் செலுத்திவிடுகின்றன.

**வெற்று விளம்பரங்கள்**

அரசியல்வாதிகளுக்கு கவலை இருந்திருந்தால், குழந்தைகளை நேசித்திருந்தால், சட்டமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு கடைசியாக வெளியிடப்பட்ட குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை வைத்துக்கொண்டு 2019ஆம் ஆண்டில் விவாதம் செய்திருக்க மாட்டார்கள்.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம். (Beti Bachao, Beti Padhao) என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முழக்கத்தை முன்வைத்து, 22.01.2015 அன்று நிர்பயா நிதிக்கு 3600 கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார். குறிப்பிட்ட ஐந்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த நிதியின் பெரும்பகுதி விழிப்புணர்வு விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது. மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து வெளியிடுங்கள் என்றார், #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. விழிப்புணர்வுக்காக செய்யப்பட்ட இந்த பரப்புரை ஏன் எதற்கு என்று தெரியாமலேயே போனது.

**செயல்பாட்டில் சிக்கல்கள்**

Child Protection Services (CPS), Emergency Response Support Syster (ERSS), Central Victim Compensation Fund (CVCF), Integrated Emergency Response System (IERMS), One Stop Centre என்று அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாட்டில் வேகமில்லை.

சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், உள்கட்டமைப்பு, மனித வளம், கூடுதல் அரசு வழக்குரைஞர்கள், தடவியல் தேவைகள், சட்ட – மருத்துவ உதவிகள், தடவியல் ஆய்வகங்கள், தடவியல் ஆலோசகர்கள் நியமனம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறித்த ஆவணப் பராமரிப்பு ஆகியவற்றை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை 21.04.2018இல் முடிவெடுத்தார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்திட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வழக்கில் மரண தண்டனை வழங்கவும், குழந்தைகளுக்கு ஹார்மோன் செலுத்தும் குற்றத்திற்கும் கடும் தண்டனை வழங்கவும் போக்சோ சட்டத்தில் மத்திய அமைச்சரவை திருத்தம் செய்துள்ளதாக 28.12.2018இல் சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி (17.07.2019) போக்சோ சட்டப்படி 31 மாநிலங்களில் பதியப்பட்ட 1.6 லட்சம் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடுகிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி 19.07.2019 அன்று மாநிலங்களவையில், 1063 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

Child Protection Services (CPS) திட்டத்தின்படி 2016 – 2017 நிதியாண்டில் 50,847.97 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 46,769.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2017-2018ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 52469.95 லட்ச ரூபாயில் 52823.64 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. 2018-2019 கணக்குப்படி 73451.70 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளனர். இந்தப் பட்டியலின் படி தமிழக அரசு 364 கோடி ரூபாய் 2016 – 2017ஆம் நிதியாண்டியிலும், 551 கோடி ரூபாய் 2017-18ஆம் நிதியாண்டிலும், 862 கோடி ரூபாய் 2018 – 2019ஆம் நிதியாண்டிலும் குழந்தைகள் பாதுகாப்பு சேவை திட்டத்திற்காக செலவு செய்துள்ளனர்.

போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், காவல்துறையினர், தன்னார்வ செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக அரசு 9ஆம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றி கற்பிக்கிறது.

ஆனாலும், சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அரசும் அதில் முழு கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.

**சட்டத்தைத் தாண்டிய தீர்வு**

பாலின சமத்துவம், என் உடல் என் உரிமை, குழந்தை நலன், பதின்பருவ மாற்றங்கள் பற்றியெல்லாம் பாடத்திட்டத்தில் கற்றுக்கொடுப்பதில்லை. நல்லொழுக்கம், குழந்தைகள் நீதி குறித்து பள்ளியிலும் கற்கவில்லை, பெற்றோரும் சொல்வதில்லை, சமுதாயத்திலும் அதற்கான வாய்ப்பில்லை. அதனால்தான் 15 வயது முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், 17 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்கள் அதிகம் வழக்கில் சிக்குவதாகவும் ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சட்டத்தின்படி முழுமையான தீர்வு கிடைக்காது என்பதால்தான் ஆற்றுப்படுத்துதல், குழந்தைகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துதல், விழிப்புணர்வை உண்டாக்குதல் போன்ற முன்முயற்சிகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும் முன்னெடுக்கின்றன. ”நாடு கெட்டுப்போய் கிடக்கு, சீக்கிரம் வீடு வந்து சேருமா” என்று பெண் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பெற்றோர்கள், “மனுசனா நடந்துக்கய்யா, ஒவ்வொரு உசுரையும் நேசிக்கணும்யா” என்று ஆண் குழந்தைகளோடும் உரையாட வேண்டும். குழந்தைகளை நேசித்து, நேர்மறை எண்ணங்களை விதைத்து, குழந்தைகள் நலனை முன்னிறுத்தி, குடிமைச் சமூகத்தின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகளின் வாழ்விற்கான ஆரோக்கியசூழல் உருவாகும். பாலியல் வன்முறை என்பது சமுதாயப் பிரச்சினை என்ற நோக்கில் நாம் அணுகும்போது நிச்சயம் நம் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள்.

**

மேலும் படிக்க

**

**[மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/22/61)**

**[ டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!](https://minnambalam.com/k/2019/07/23/77)**

**[தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/22/23)**

**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *