சத்குரு, நிறுவனர், ஈஷா அறக்கட்டளை
ஒரு குழந்தையை நல்ல பண்புள்ள மனிதனாக வளர்ப்பதற்கு வழிமுறைகள் உள்ளனவா?
ஒரு குழந்தைதான் உயிர்த்தன்மையோடு ஒத்து வாழ்கிறது. ஆனால் நீங்கள்பல காரணங்களால் உயிர்த்தன்மையோடு ஒத்திசைவாய் வாழும் நிலையினை மறந்துவிட்டீர்கள். எனவே, ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு நீங்கள் ஏதோ சொல்லித் தர வேண்டும் என்று அவசியமில்லை. உடல்நிலையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள், அது வாழும் சூழ்நிலையை அன்பாகவும், ஆனந்தமாகவும் அமைத்துத் தாருங்கள், பிறகு குழந்தை தானாகவே நன்றாய் வளரும்.
தோட்டத்தில் ஒரு செடியை வளர்க்க வேண்டுமென்றால், அதன் அருகே சென்று அமர்ந்து, அதனை இழுத்து இழுத்துப் பார்த்தால் செடி வளர்ந்து விடுமா? தேவையானசூழ்நிலையை உருவாக்கினால் அது தானே வளரும். ஊட்டச்சத்துள்ள மண்ணும், தண்ணீரும், சூரியஒளியும் கிடைக்குமாறு செய்தால் அந்தச் செடி தானாய் வளரும். அதேபோல குழந்தை வளரவும் தேவையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலையை உருவாக்காமல் நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் எதுவும் நிகழாது.
குழந்தையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பெற்றோர் வீட்டில் எத்தகைய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். பயமும், பதற்றமும், போராட்டமும் நிறைந்த வீட்டில் குழந்தை எப்படி ஆனந்தமாக வளரும். ஒரு குழந்தையைச் சுற்றி எத்தகைய சூழல் நிலவுகிறதோ, அதற்கேற்ற குழந்தையாகத்தான் வளரும். எனவே அன்பான, அமைதியான, ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்குவது பெற்றவர்களின் அடிப்படையான பொறுப்பு.
13ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங் என்றொருவர் இருந்தார். ஒருநாள் அவர் மிகவும் சோகமாக மன அழுத்தத்தோடு அமர்ந்திருந்தார். அவர் மனைவி மிகவும் புத்திசாலியான பெண். மார்ட்டினின் நிலையைப் பார்த்தவர் என்ன செய்தாரென்றால், வீட்டிற்குள்ளே சென்று ஒரு கறுப்பு அங்கியை முழுமையாக அணிந்து கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த மார்ட்டின், என்ன இது, கருப்புத் துணியை அணிந்து வந்திருக்கிறாய்” என்று கேட்டார். அதற்கு மார்ட்டினின் மனைவி, “கடவுள் இறந்துவிட்டார், அந்த துக்கத்தின் அடையாளமாக கருப்புத் துணியை அணிந்திருக்கிறேன்” என்றார். மார்ட்டின் லூதர்கிங், “கடவுள் எப்படி சாக முடியும்?” என்றார். அவர் மனைவி, “கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னுமிருந்தால், நீங்கள் ஏன் சோகமாய் இருக்கிறீர்கள்? அதற்கு என்ன தேவை வந்தது?” என்று கேட்டார். அப்போதுதான் மார்ட்டின் தன் நிலையை உணர்ந்தார். துயரமும், பாதிப்பும், பதற்றமும் பிசாசின் செயல்கள்.
நம்முள்ளிருக்கும் நம் உருவாக்கத்தின் அடிப்படை சக்தியைத்தான் கடவுள் என்கிறோம். அந்த சக்தி நம்முள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் செயல் நம்முள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வரை துயரத்திற்கும் சோகத்திற்கும் பாதிப்பிற்கும் காரணங்கள் இல்லை.
நம் குழந்தை நன்றாய் வளர வேண்டும் என்றால், முதலில் நாம் எப்படி நன்றாக இருப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கே அது புரியவில்லை என்றால், குழந்தைக்கு எப்படி கற்றுத்தர முடியும். ஆனந்தமாக இருப்பது எப்படியென்பது குழந்தைக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வாழ்க்கையை நிகழ்த்த, பிழைப்பிற்கான வழிமுறைகளை மட்டுமே நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பொருளாதாரச் சூழல் இதில் முக்கியமில்லை.
அன்பான ஆனந்தமான ஒரு சூழலை நம்மால் உருவாக்க முடியும் என்றால் மட்டுமே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான தகுதி மனிதனுக்கு இருக்கிறது. மகிழ்ச்ச¤யில்லாத மனிதர்களை உருவாக்கி இந்த உலகில் உலவவிடுவது மிகப் பெரும் குற்றம். இது மனித குலத்திற்கு நேரும் மிகப்பெரும் தீங்கு. இந்தக் குற்றத்தை பலரும் செய்கிறார்கள். இந்தச் சூழல் நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். என் மாமியார் இப்படியிருக்கிறாரே, என் மனைவி அப்படியிருக்கிறாளே, என் அண்டை வீட்டார் அப்படியிருக்கிறார்களே என பலவிதமான காரணங்கள். ஆம்,அவர்கள் அப்படித்தான்.
உங்கள் ஆனந்தத்தை, வெளியிலிருக்கும் சூழ்நிலையைக் கொண்டு உருவாக்க நினைத்தால் அது நிகழாது. வெளிச் சூழ்நிலை 100% நாம் நினைத்த விதமாக நடப்பதில்லை. ஆனால் உள்சூழலை நமக்கு எப்படித் தேவையோ அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கான கருவியையே நாம் யோகா என்கிறோம்.
மனிதன் தன் உள்நிலையிலேயே பேரானந்தத்தை உணர்வதற்கான விஞ்ஞானமே யோகா. ஒவ்வொரு மனிதனும் அவனது நன்மையை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையின் நன்மையையும் இதன் மூலம் உணர வேண்டும்.�,”