{குல்புஷன் ஜாதவ்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Balaji

குல்புஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் ஜாதவுக்குச் சட்ட உதவிகளை அனுமதிக்கவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியக் கடற்படை அதிகாரியான குல்புஷன் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியன்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது, விசாரணை முடியும் வரையில் குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குல்புஷன் ஜாதவ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குல்புஷன் ஜாதவ் வழக்கில் ஜூலை 17ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியாகும் என்று இம்மாத தொடக்கத்திலேயே சர்வதேச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அவ்வகையில் நேற்று இவ்வழக்கு மாலை 6.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அப்துல்ஹக்வி அகமது யூசுப் தீர்ப்பை வாசித்தார்.

அதில், குல்புஷன் ஜாதவுக்குத் தூதரக அதிகாரிகளின் உதவி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சட்டத்தை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குல்புஷன் ஜாதவ் இந்தியத் தூதரக அதிகாரிகளின் சட்ட உதவியைப் பெற வழிவகை செய்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறு ஆய்வு செய்து, மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பலரும் வரவேற்பளித்துள்ளனர். மேலும், இந்திய தரப்புக்காகத் திறம்பட வாதாடிய ஹரிஷ் சால்வேவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஹரிஷ் சால்வே இந்தியாவின் மிக முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராவார். அவருக்கான கட்டணங்கள் மிக உயர்வு. குல்புஷன் ஜாதவ் வழக்கில் ஹரிஷ் சால்வேவுக்குப் பதிலாக மற்ற வழக்கறிஞர்களை நியமித்திருந்தால் செலவுகளைக் குறைத்திருக்கலாம் என்று ட்விட்டரில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களுக்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், “இது சரியான கருத்தல்ல. இவ்வழக்கில் ஹரிஷ் சால்வே ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share