இந்திய கடற்படை வீரர் குல்புஷன் ஜாதவ்விற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனை விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் நேற்று (ஜூலை 17) தீர்ப்பளித்தது. அதன்படி, குல்புஷன் ஜாதவ்விற்கு சட்ட உதவிகள் மறுக்கப்பட்டு சர்வதேச சட்டத்தை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாக சாடிய நீதிபதிகள், அவருக்கு சட்ட உதவிகளை அனுமதிக்கும்படியும், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து இன்று (ஜூலை 18) மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “குல்புஷன் ஜாதவ்வின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வது மட்டுமல்லாமல் அவரை விரைவில் இந்தியா அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரமாக மேற்கொள்ளும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களிலும், ஒப்பந்தங்களிலும் நம்பிக்கை வைத்திருப்போரின் வெற்றியாகும்.
குல்புஷன் ஜாதவ்வை பாகிஸ்தான் அரசு விடுவித்து அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு வரவேற்கிறது. வியன்னா ஒப்பந்தத்தின் விதிகளை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாக 15 நீதிபதிகள் வாக்களித்துள்ளனர். அதற்கு எதிராக ஒரு நீதிபதி மட்டும் வாக்களித்துள்ளார். அவர் மட்டும் பாகிஸ்தானை சேர்ந்த நீதிபதி ஆவார். வியன்னா ஒப்பந்தத்தின்படி குல்புஷன் ஜாதவ்வின் உரிமைகளை எந்தத் தாமதமுமின்றி அவருக்கு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு இந்திய தூதரக அதிகாரிகளின் சட்ட உதவியையும் அனுமதிக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் வாயிலாக குல்புஷன் ஜாதவ்விற்கு விடுதலை பெற்றுத்தர அரசு இடையறா முயற்சிகளை மேற்கொண்டது. அதே வகையில் தொடர்ந்து முயற்சிப்போம். கடுமையான சூழல்களிலும் கூட குல்புஷன் ஜாதவ்வின் குடும்பத்தினர் தைரியத்தை வெளிப்படுத்தினர். நிச்சயமாக ஜாதவ் நாடு திரும்புவார் என அவர்களுக்கு உறுதியளிக்கிறென்” என்று தெரிவித்தார். இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தலைமையில் இந்திய தரப்பிற்காக வாதிட்ட சட்டக் குழுவிற்கும் ஜெய்சங்கர் புகழாரம் சூட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, “சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த அவையும் வரவேற்பளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குல்புஷன் விடுவிக்கப்படுவது வரையில் இடையறாது முயற்சிப்போம் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
�,”