குற்றாலம்: கொட்டும் அருவி, குவியும் மக்கள், தூங்கும் அதிகாரிகள்!

Published On:

| By Balaji

டி.எஸ்.எஸ். மணி

குற்றாலம் அருவி சீசன் தொடங்கிவிட்டது. 10-06-2019 காலை ஐந்தருவியில் தண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பின் குடிநீருக்காகத் தேவையான தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10 மதியம் மெயின் அருவியில் தண்ணீர் வரத் தொடங்கியது. ஆனால், குற்றாலத்தில் கூடும் மக்கள் தொல்லையின்றி வந்துசெல்வதற்கான அடிப்படை வசதிகள் அங்கு இல்லை என்கிறது 11-06-2019 தமிழ் நாளேடு. பேரூராட்சியின் கீழுள்ள சுற்றுலா விடுதிகள் 14இல் அடிப்படை வசதிகள் இல்லாமல், பாழடைந்திருப்பதை அந்த நாளேடு சொல்கிறது. பெண்கள் ஆடை மாற்றும் அறைகள் பராமரிப்பின்றிக் கிடப்பதை அந்த ஏடு சுட்டிக் காட்டுகிறது.

பராமரிப்புப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் பேரூராட்சி ரூ.5.40 கோடி கேட்டுள்ளது எனக் கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் நிதி ஒதுக்க முடியாது என்று பதில் வந்தது. மே 30க்குள் தேர்தல் விவகாரங்கள் முடிவடைந்துவிட்டன. ஜூன் தொடங்கினால் அருவி சீசன் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுலாத் துறை தூங்கிவிட்டதா?

உண்மையில், தமிழ்நாட்டிலேயே இரண்டு சிறப்பு நிலை பேரூராட்சிகள்தான் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவை பவானிசாகரும், குற்றாலமும் தான் என்றால் நம்ப முடிகிறதா?

குற்றாலத்தில், குப்பைத் தொட்டிகளோ, குப்பை அள்ளும் வண்டிகளோ, இருக்கும் நிலை தெரியுமா? குப்பை அள்ளும் ஆட்டோக்கள் குற்றாலத்திற்கு ஒதுக்கப்பட்டன. அவை உடைந்த நிலையில், பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன!

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குப்பை அள்ளுவதற்காக 8 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், 2 டிரைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் ஒரு டிப்பர் லாரி இருக்கிறது.

மொத்தம் அரசு துப்பரவுப் பணியாளர்கள் 28 பேர் இருக்கிறார்கள். தற்போது பணியாற்றிவரும் ஊழியர் எண்ணிக்கை 11. அதில் இரண்டு பேர் பிளம்மிங் பணி போகிறார்கள். ஒன்பது பேர் மட்டும்தான் துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள். பிளம்பர் கையெழுத்திட மட்டும்தான் வருகிறார். ஆனால், இந்தப் பேரூராட்சியில் அதிகபட்ச சம்பளம் இவருக்குத்தான் என மற்றவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்களாக இருக்கும் பெண்கள் குழுவில் 9 பேர் இருக்கிறார்கள். ஆண்கள் குழுவில் 9 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு 330 ரூபாய். ஆனால், வவுச்சரில் கையெழுத்து வாங்குவதில்லை.

மெயின் அருவி பேரூராட்சி தங்கும் விடுதியில் பணியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. 90 சதவீதம் தனியார் தங்கும் விடுதிகள் இங்கு இயங்குகின்றன. அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.

குற்றாலத்தில் தனியார் வீடுகளைத் தங்கும் விடுதிகளாக பயன்படுத்தி வருகிறார்கள்: நியூட்டன் பஜாரில் உள்ள தனியார் விடுதிகளில் அனைத்து எச்சிலைக் குப்பைகளும் சிற்றாற்றில்தான் கொட்டப்படுகின்றன.

இத்தனைக்கும் காரணம், பராமரிப்பில் பேரூராட்சி நிர்வாகம் காட்டும் மெத்தனம்தான் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது. ஆனால், பேரூராட்சி அதிகாரிகள் இன்னமும் தூங்குகிறார்களா?

**

மேலும் படிக்க

**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share