கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைத் தாங்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்படி சுமார் 20 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது. சென்னை நகர மக்களின் ஒரு வருட தண்ணீர் தேவை 12 டிஎம்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைக் கருத்தில்கொண்டு கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனிடையே பலத்த மழைக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கரைகள் சேதமடைந்தன. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு பல பகுதிகளில் கரைகள் சேதமடைந்தன. முதல் கட்டமாக 6.20 கிலோமீட்டர் தூரத்துக்கு கரைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி ஒதுக்கியது. இந்த நிதியைக் கொண்டு கரைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நேற்று வரை 3.80 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 30.66 அடியாக பதிவானது. 1.896 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்குத் தண்ணீர் பெற முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
.