குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு: அதிகரிக்கும் நோய்த்தொற்று!

Published On:

| By Balaji

மேத்யூ ஹேசல்

பால்வினை நோய்களின் பரவல் அதிகரித்துவரும் வேளையில், ஆணுறை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவந்துள்ளது நிச்சயம் வருத்தமளிக்கும் விஷயம்தான்.

நான் முதன்முறையாக என் தோழியுடன் செக்ஸ் கொண்டபோது ஆணுறை பயன்படுத்தவில்லை. கல்லூரியில் படித்தபோது, சுமார் ஆறு மாதங்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தேன். அப்போது இருவருமே உடல் பரிசோதனை செய்துகொண்டோம். எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; அதற்கு முன்னர் நான் யாருடனும் உறவு கொண்டதில்லை. எனது தோழி மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்தார். இருவருமே பொறுப்புடன் இருந்ததாக நினைத்தேன். இந்த அனுபவம் மகிழ்ச்சி தருவதாக உணர்ந்தேன்; நிறைய பேருடன் பழகிய பிறகு, ஹாக்கி விளையாடும்போது அந்த இடத்தில் பாதுகாப்புக் கவசம் வைத்துக்கொள்ளாமல் இருப்பது போலவும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடாமல் இருப்பது போலவும் உணர்ந்தேன். இது எனக்கு திருப்தியைப் போதுமான அளவுக்குத் தரவில்லை. இதன் பிறகு ஆணுறைகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.

ஆனால், என்ன ஆச்சரியம்! நான் சிறு குழுவில் ஒருவனாகிப் போனேன். ஏனென்றால், தற்போது ஆண்களில் ஆணுறைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலான ஆண்கள் அடிக்கடி அல்லது நீண்ட காலமாக ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதாக மென்ஸ் ஹெல்த் பத்திரிகையில் செக்ஸ் மற்றும் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளைத் தந்துவரும் டெபி ஹெர்பெனிக் குறிப்பிடுகிறார். இவர் இண்டியானா பல்கலைக்கழகத்தில் செக்ஸ் நலம் குறித்த ஆய்வாளராக இருந்து வருகிறார். தற்போது 20ஐத் தாண்டிய நடுத்தர வயது ஆண்களிடம் ஆணுறை பயன்படுத்தும் வழக்கமில்லை என்கிறார் இவர்.

அமெரிக்காவிலுள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரமொன்று அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பாலியல் ரீதியாகத் தொற்றும் நோய்களின் பரவல் அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கொனேரியா, சிபிலிஸ், க்ளமிடியா போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.

ஆணுறையைப் பயன்படுத்துவதற்கான கட்டாயம் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில், ஏன் அதன் மீது ஆண்களுக்கு விருப்பம் இல்லாத நிலை உருவாகியுள்ளது? செக்ஸ் நல நிபுணர்களின் ஆய்வுப்படி இதற்குப் பல காரணங்கள் உள்ளன. செக்ஸ் குறித்த புரிதல் குறைவாகக் காணப்படுவது அவற்றில் ஒன்று. அது மட்டுமல்லாமல், போர்னோகிராபியில் இடம்பெறும் எவரும் ஆணுறை பயன்படுத்துவதில்லை. இதைப் பார்ப்பவர்களிடையே இந்தக் காட்சிகள் அதிகத் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. பொது சுகாதாரம் தொடர்பான பரிந்துரைகளின் மீதான அவநம்பிக்கை குறைவான வருமானம் பெறுபவர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. இது மட்டுமல்லாமல், மது போதையும் ஆணுறை பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காரணமாகிறது.

செக்ஸ் உறவில் திளைக்கும் சில ஆண்களிடம் இது பற்றிப் பேசினேன். ஒஹியோவைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் டேவிட் பேசும்போது, “ஆணுறை அணியாமல் இருக்கும்போது பல மடங்கு அதிகமாக இன்பத்தை உணர்கிறேன்” என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 20 பெண்களுடன் ஆணுறை இல்லாமல் உறவு கொண்டிருப்பதாகக் கணக்கு கூறினார். அவருடன் உறவு கொண்ட பெண்களும், ஆணுறை பயன்படுத்தாமல் இருப்பதையே விரும்பினாராம். “அதுதான் அவர்களுக்கு இன்பம் தருவதாக அவர்கள் உணர்ந்ததாக நினைக்கிறேன்” என்று கூறிய டேவிட், தனது முழுப் பெயரையும் வெளியிட விரும்பவில்லை. தான் ஆணுறை பயன்படுத்தாமல் இருப்பது தனது தாய்க்குத் தெரிய வேண்டாமென்று டேவிட் விரும்பியதே இதற்குக் காரணம். இதிலிருந்து நான் அறிந்துகொண்டது, ஒருவேளை தாயிடமிருந்து வெளியாகும் கண்டனம் சிறந்த தற்காப்பைக் கற்றுத் தரலாம் என்பதே.

ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஏஞ்சலுக்கு 30 வயதாகிறது. இப்போது வரை, இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர், 15 ஆண்டுகளுக்கு முன்னரே ஆணுறைகள் பயன்படுத்தும் வழக்கத்தைக் கைவிட்டவர். சேணமில்லாத குதிரையை ஓட்டுவது போல இந்த வழக்கமே இவருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. அதே நேரத்தில் இது அபாயகரமானது என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தொடர்ச்சியாகத் தனது உடல்நலம் குறித்துப் பரிசோதனை மேற்கொண்டுவருவதாகக் கூறுகிறார்.

இதுவரை தன்னை எந்த நோயும் தொற்றவில்லை என்று கூறும் ஏஞ்சல், “இது சிறந்த வழிமுறை கிடையாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அந்த மாதிரியான சூழலில் இருக்கும்போது உங்களால் அறிவுபூர்வமாக யோசிக்கவே முடியாது” என்கிறார்.

பல பேர் தங்களது மூளையில் செக்ஸ் நிரம்பியிருக்கும்போது இப்படித்தான் இருக்கின்றனர். ஆனால், சிபிலிஸ் நோய்த் தோற்றுக்கு ஆளானவர்களும் இதேமாதிரி சொல்வதைக் கேட்பது வேதனையானதுதான்.

நன்றி: [மென்ஸ் ஹெல்த்](https://www.menshealth.com/sex-women/a26324381/decline-in-condom-use/)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share