?குருவை தொலைத்த சிஷ்யன்!

Published On:

| By Balaji

**ஒரு கப் காபி**

தாகம் கொண்டவர்களைத் தான் தண்ணீரும் தேடுகின்றது என்பார் ரூமி. பொருள் சார்ந்த தேடலை விட ஆத்மிகமான தேடல்களையே நம் மரபுகள் தொடர்ந்து முன் வைக்கின்றன. தேடலில் தொலைந்து போகாமலிருக்க, வழிதப்பி போகாமலிருக்க வழிகாட்டியாக குரு என்பவரின் முக்கியத்துவதையும் அவை நமக்கு சொல்லியிருக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றைப் பார்க்கலாம்..

மத்திய கிழக்கில் ஒரு வணிகர் இருந்தார். இளைஞனாக துடிப்புடன் இருந்தபோது அவரது வாழ்க்கையில் இரண்டு பெரிய ஆசைகள் இருந்தன. ஒன்று ஆன்மீக உலகத்தைப் புரிந்துகொள்வதும் ஆழ்ந்த ஆன்மீக சத்தியங்களைக் கற்றுக்கொள்வதும். மற்றொன்று நிறைய பணம் சம்பாதிப்பதிக்க வேண்டும். ஏனெனில், குழந்தை பருவத்தில் பணமில்லாமல் நிறைய அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தால் இயல்பாகவே அதிக பணம் வேண்டும் என்று விரும்பினார்.

ஆன்மீகத்திற்கான அவரது விருப்பத்தை விட பணத்திற்கான அவரது விருப்பம் நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்தது. வர்த்தகத்தில் ஈடுபட்டார், இரவு பகல் பாராமல் உழைத்தார், செல்வந்தரும் ஆனார். அவர் நிறைய பணம் சம்பாதித்தபோது அவருக்கு 50 வயதுக்கு மேல் ஆனது. அவர் கையில் தற்போது நிறைய பணமிருந்தது. பணத்தால் வாங்க முடிந்த அனைத்தையும் வாங்கினார், அனுபவித்தார்..

பின், பணத்தால் வாங்க முடியாத அனைத்தையும் அனுபவிக்க விரும்பினார். அவரது மனதின் மூலையில் மறைந்திருந்த ஆன்மீகத்திற்கான அவரது விருப்பம் இப்போது முன் வந்தது. தன் வணிகத்தை மகன்களிடம் கொடுத்து விட்டு ஒரு மூட்டை நிறைய பணமும், ஒரு மூட்டை நிறைய புத்தகங்களுடனும் தன் பயணத்தை தொடங்கினார். பாலைவனத்தைக் கடந்து கொண்டிருந்தவர் நிழலுக்கு இளைப்பாற பாலைவனச் சோலை ஒன்றை கண்டார். தாகம் தீர்ந்தபின், அந்த இடத்தை சுற்றிப் பார்த்தார். ஆஹா..அற்புதமான இடமாக இருக்கிறதே என அங்கேயே ஒரு சொகுசான குடில் அமைத்து கொண்டு வந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினார்.

அவருக்கு சமைக்கத் தெரியாது. எனவே ஒரு சமையல்காரரை பணியமர்த்த நினைத்தார். ஒரு கிராமவாசி அவரிடம் வந்து, நான் ஒரு நல்ல சமையல்காரன், தயவுசெய்து என்னை உங்கள் சமையல்காரராக நியமிக்கவும், நான் எனது சம்பளமாக உணவை மட்டுமே கேட்பேன்” என்றார்.

“சரி, நல்லது, ஆனால் தயவுசெய்து நீங்கள் என்னை தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி கூறுங்கள். எனது ஆன்மீக தேடலில் கவனம் செலுத்த நான் இங்கு வந்துள்ளேன்” என்று வணிகர் கூறினார். சமையல்காரரும் வேகமாக தலையசைத்தார். வணிகரும் தான் கொண்டு வந்த புத்தகங்களை பரீட்சைக்கு படிக்கும் மாணவனைப் போல சிரத்தையுடன் படித்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தது. 7 ஆவது ஆண்டின் முடிவில் ஏற்கனவே இதைச் செய்த, எப்படி செய்வது என்று அறிந்த ஒருவரின் உதவி தனக்குத் தேவை என்ற தெளிவுக்கு வந்தார்.

மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்தார், ஆனால் வணிகர் திருப்தி அடையவில்லை. ஒரு நாள் அவர் கற்பனை செய்துவைத்திருந்த ஆன்மிக குருவின் உருவத்திற்கு ஏற்ப ஒரு மனிதரைக் கண்டார். ஆனால் அவரோ, ‘நான் உன்னை ஒரு மாணவனாக ஏற்க வேண்டுமானால் எனது ஆசிரியரின் அனுமதியைக் கேட்க வேண்டியிருக்கும்’ எனக் கூறினார். உங்கள் குருவிடம் அனுமதி பெற்றுக் கூறுங்கள் என வணிகர் கூறினார். ஆனால் அவரோ குருவைப் பார்த்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவரைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார்.

குருவைப் பற்றிய அங்க அடையாளங்களைக் கூற, சந்தேகமடைந்த வணிகர் அவரை அழைத்துக் கொண்டு தன் குடிலுக்கு வந்தார். சமையல்காரர் இருவரையும் வரவேற்றார். வணிகர் அழைத்து வந்த குரு, சமையல்காரரைக் கண்டதுமே சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அவரது காலில் விழுந்தார்.

“குருவே, இத்தனை வருடமாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்றார் ஆன்மிக குரு.

“நான் இந்த மனிதனுக்காக சமைத்துக்கொண்டிருந்தேன்” என்றார் சமையல்காரர்.

“ஆனால் இந்த மனிதன் இன்னும் ஒரு குருவை தேடுகிறானே” என்றார் வணிகர் அழைத்து வந்த குரு. “ஆமாம், அவருக்கு ஒரு குரு தேவை என்பதை உணர ஏழு ஆண்டுகள் பிடித்தன” சமையல்காரர் சிரித்தபடி கூறினார்.

“அப்படியானால் இப்போது என்ன செய்வது?” என்று குரு கேட்டார்.

“இப்போது நீ அவருக்கு கற்றுக்கொடு, எனக்கு வேறு வேலை இருக்கிறது” எனக் கூறிவிட்டு சமையல்காரர் வெளியேறினார்.

வணிகர் சமையல்காரர் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share