குருவின் சகோதரி, வீரப்பன் மனைவி வேல்முருகன் கட்சியில்!

Published On:

| By Balaji

காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. காடுவெட்டி குருவின் தங்கையான செந்தாமரையும், வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியும் இந்தக் கூட்டத்தில் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைத்துக்கொண்டனர். இருவரும் இணைந்தது குறித்து வேல்முருகன் அந்தக் கூட்டத்தில் பேசுகையில், “காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காக பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் பாடம் புகட்டவே செந்தாமரை எங்களுடன் இணைந்துள்ளார்.

காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கு நாம் அளித்துள்ள பாதுகாப்பால் அவர்களால் இப்போது ஒன்றும் செய்ய இயலவில்லை. டிஜிபியைச் சந்தித்து குருவின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுத்த பின்னர்தான், அவர்கள் கட்சியில் இணைந்து கொள்கிறோம் என்று நம்மிடம் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

அதேபோல வீரப்பன் மனைவி முத்துலட்சுமி இணைந்தது குறித்து வேல்முருகன் கூறுகையில், “வேல்முருகன் கட்சியில்தான் இணைய வேண்டும் என்று முத்துலட்சுமியின் தந்தை ஏற்கெனவே அவரிடம் கூறியுள்ளார். அவருக்கு விருப்பம் இருக்கும்போது வரட்டும் என்று நானும் கூறியிருந்தேன். ஆனால் அவரை கட்சியில் இணையுமாறு நான் கட்டாயப்படுத்தவில்லை என்று அவரிடமே கூறியுள்ளேன். இப்போது அவரே வந்து இணைந்துள்ளார்” என்றார்.

**பாமகவுக்கு எதிராக தேர்தல் பரப்புரை**

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் வன்னியர் சங்கங்கள் எதிர் பிரச்சாரம் மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளன. வன்னியர்களின் 18 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

உள் ஒதுக்கீடு அரசாணையைச் செயல்படுத்த வேண்டும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்க கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பாமகவுக்கு எதிராக ஏழு தொகுதிகளிலும் எங்கள் கூட்டியக்கம் பரப்புரை மேற்கொள்ளும். ராமதாஸும், அன்புமணியும் சரியில்லை என்று பிரச்சாரம் செய்வோம். வன்னியர் சமுதாயத்தின் கேன்சர் ராமதாஸ்” என்று கூறினார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share