ஆக்ராவில் குரங்குகள் தாக்கியதனால் ஒரு பெண் மரணமடைந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் குரங்குகளினால் ஒரு குழந்தை பலியான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள கச்சேரா மொகல்லா பகுதியில் ஒரு தாயின் கையிலிருந்த குழந்தையைப் பறித்துச் சென்றது ஒரு குரங்கு. பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையைப் பறிகொடுத்த அந்த தாய் கதறினார். அதன்பின், அக்குழந்தையை அப்பகுதி மக்கள் தேடினர். உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்த நிலையில், அந்த பெண்ணின் பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் குழந்தையின் உடல் கிடந்தது. இது, அந்த வட்டாரத்தில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில், ஆக்ராவிலுள்ள தோக் மொகல்லாவைச் சேர்ந்த பூமி தேவி என்ற பெண், நேற்று (நவம்பர் 14) வீட்டிலிருந்து வெளியே கிளம்பினார். அப்போது, அங்கு திடீரென்று வந்த சில குரங்குகள் அவரைப் பலமாகத் தாக்கின. அப்பகுதி மக்கள் குரங்குகளை விரட்ட முயற்சித்தனர். பலமான போராட்டத்துக்குப் பிறகே, காயங்களுடன் பூமிதேவியை மீட்க முடிந்தது.
ஆனாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. “அவரது உடலில் அதிகளவில் ரத்த இழப்பு ஏற்பட்டதால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர் பூமிதேவியின் குடும்பத்தினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர். அப்போது, 1972ஆம் ஆண்டு காட்டுயிர் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருந்து குரங்குகளை நீக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகவியலாளர்களும் கலந்துகொண்டனர். குரங்குகளால் தாக்கப்பட்டவர்களுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு போதுமான நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்தியமேவ ஜயதே அறக்கட்டளையைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள குரங்குகளைக் காட்டில் கொண்டுவிடுமாறு தாங்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருவதாகக் கூறினார். குரங்குகளின் இனப்பெருக்க விருத்தியை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தும், அரசு அமைப்புகள் அதற்கு அனுமதி தர மறுப்பதாகத் தெரிவித்தார்.
குரங்குகள் இங்குள்ள வீடுகளின் மொட்டைமாடிகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாகவும், இதற்குப் பயந்து பெண்களும் குழந்தைகளும் நடமாட முடியாமல் தவிப்பதாகவும் கூறினார் சமூகச் செயல்பாட்டாளரான ஷ்ரவன்குமார் சிங். ஒவ்வொரு நாளும் குரங்குகளால் காயப்படும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.�,