கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று காலையில் கர்நாடக சட்டமன்றம் கூடியது. சபாநாயகருக்கு எதிராக இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிக்கப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் சிவகுமார், “நாம் பசவண்ணாவின் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளேன். ஆனால் இப்போது நாங்கள் தவறாக காட்டப்படுகிறோம். நாம் நமது சித்தாந்தங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் வழக்கறிஞர் இன்று மதியம் 1.30 மணியளவில் சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்து பேசினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் சபாநாயகரை சந்தித்தனர்.
பின்பு அவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் சித்தராமைய்யா, “14 மாதங்களாக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. எந்தவொரு தனிக் கட்சிக்கும் மக்கள் பெரும்பான்மை கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்புக்கு அனைத்து கட்சிகளும் மதிப்பளிக்க வேண்டும். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று மாநிலத்தில் 99 விழுக்காடு பேருக்கு தெரியும். பாஜக ஆட்சியமைத்து, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக்கினால் யாரும் கவனிக்க மாட்டார்களா?
இன்றைய அரசியலை நினைத்து வெட்கப்படுகிறோம். அரசியலில் மதிப்புள்ள மக்களுக்கு இடமில்லை. நல்லவர்கள் அரசியலில் இருக்க வேண்டும். அரசுகள் வந்துபோகும். ஆனால் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். எம்.எல்.ஏக்களை சில்லறை விற்பனை செய்வது வெட்கத்திற்குரிய செயல். ரூ.25 கோடி, ரூ.30 கோடி, ரூ.50 கோடி என எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது? எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அரசியல் சமாதி கட்டமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, “கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சபாநாயகரும் புண்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்பு கோருகிறேன். சித்தராமைய்யா சொன்னது போல கடந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் அரசியலை விட்டு விலகியே இருக்க விரும்பினேன்.
எனது திருமணத்தின்போது எனது மனைவி ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் இன்று அவரும் ஒரு எம்.எல்.ஏ. நான் சினிமாத்துறையை சேர்ந்தவன். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். இந்த அரசின் வீழ்ச்சிக்கு தேவ கவுடாதான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அவரைப் பற்றிப் பேச வேண்டாம். ஏனென்றால் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அவர் எனது தந்தை என்பதால் இதைச் சொல்லவில்லை.
பலரும் இந்த அரசை காப்பாற்ற வேண்டுமென என்னிடம் கோரிக்கை விடுத்ததால் கடுமையாக போராடினேன். என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக எழுதுகின்றனர். நான் ஒரு உணர்ச்சிவசமான மனிதன். எனக்கு எதிராக கருத்துகளை பார்க்கும்போது நான் முதல்வராக தொடர வேண்டுமா என வியந்தேன். நான் காயமடைந்திருக்கிறேன். இந்த பதவியை மகிழ்ச்சியாக துறப்பேன்.
என்னுடைய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நன்றி. இது ஒரு நிலையற்ற அரசு என்று எதிர்க்கட்சியினர் முதல்நாள் தொட்டு சொல்லி வருகின்றனர். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர்கள் காலக்கெடு விதித்து வந்தனர். பணி செய்ய இதுதான் உகந்த சூழலா? கடந்த பத்தாண்டுகளாக அதிகாரிகள் எப்படி உழைத்தனர் என எனக்கு தெரியும். இதெல்லாம் எனது சாதனையல்ல. எனது அதிகாரிகளின் சாதனை.
பட்ஜெட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியுள்ளேன். ரூ.25,000 கோடி வரை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு அனுமதித்திருக்கிறேன். முந்தைய அரசு ஒதுக்கிய நிதிகளையும் நான் குறைக்கவில்லை. இன்று மக்களிடம் நான் பொய் சொல்ல வேண்டிய தேவை இல்லை. கர்நாடகத்தில் என்னால் ஒரு விவசாயி கூட ஏமாற்றப்படவில்லை” என்று பேசினார்.
மேலும், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், “நான் என்னிடத்தில் ஒரு கடிதத்தை தயாராக வைத்திருக்கிறேன். நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அப்போது குமாரசாமி, “அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நான் தயாராக இருக்கிறேன். நான் எங்கும் ஓடிவிடப்போவதில்லை” என்று கூறினார்.
**
மேலும் படிக்க
**
**[மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/22/61)**
**[தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/22/23)**
**[ ராமசாமிப் படையாச்சியார் படத் திறப்பு: ராமதாஸ் பங்கேற்காதது ஏன்?](https://minnambalam.com/k/2019/07/23/10)**
**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”