நகைச்சுவை நடிகர் குமரி முத்து மறைந்ததையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள அஞ்சலிக்குறிப்பு- திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரி முத்து அவர்கள் இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், என் பெயரால் வழங்கப்படும், கலைஞர் விருது குமரி முத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர் இவர்.
திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் நம்பிராஜன் அவர்களின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் தனது நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார். இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் “கலைமாமணி”, “கலைச்செல்வம்”, ஆகிய விருதுகளைப் பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு “பெரியார் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தன் குறிப்பில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள அஞ்சலிக் குறிப்பில்,
கலையுலகில் கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே.வைப் போலவே குமரி மாவட்டத்திலிருந்து கலைத்துறைக்கு வந்த குமரி முத்து அவர்களும் கலைவாணர் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கியவர். தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்ந்தவர்.
தனது அதிர்வேட்டுச் சிரிப்பால் நம்மையெல்லாம் ஈர்த்த அவர் இன்று இல்லை என்கிற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் அவரது திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகைச்சுவை முரசாக ஒலித்த நடிகர் குமரிமுத்துவின் சிரிப்பும் சிந்தனையும் நம் கழகத்தின் பயணத்தில் என்றும் துணை நிற்கும்.என்று ஸ்டாலின் தன் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
�,