தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டி யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மருத்துவக் குழுவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் மணக்கரை வனப்பகுதியில் இருந்து மூன்று வயதுள்ள ஒரு குட்டி யானை ஊருக்குள் வந்தது. அந்தக் குட்டி யானையைப் பிடித்த தமிழக வனத் துறையினர் வரகைலார் யானைகள் முகாமில் அடைத்தனர். அந்தக் குட்டி யானையை மணக்கரை வனப்பகுதியில் மீண்டும் விட வேண்டுமென்று கோரி, சென்னை எல்சா பவுண்டேஷனைச் சேர்ந்த பிரேமா வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், காட்டிலிருந்து தப்பிவந்த குட்டி யானையை வனத் துறையினர் கும்கி யானையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சிறப்புக் குழுவொன்றை அமைத்து உத்தரவிட்டது. கேரள மாநிலம் திருச்சூர் கால்நடை மற்றும் யானைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ராஜீவ், கேரள வனத் துறை வன விலங்கு மருத்துவர் டாக்டர் அருண் ஜாகீரா, கர்நாடக மாநிலம் பெல்காம் யானைகள் விஞ்ஞானி அஜய் தேசாய் ஆகியோர் கொண்ட குழு அந்தக் குட்டி யானையைப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி உத்தரவிட்டது. ஓராண்டு கழிந்தும் இந்த மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
நேற்று (டிசம்பர் 1) நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், குட்டி யானையை அதன் கூட்டத்தோடு சேர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் முகாமில் வைத்துள்ளதாகவும், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயற்கையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தமிழக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குட்டி யானையை ஆய்வு செய்து பரிசோதனை அறிக்கையை மருத்துவக் குழு இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,