குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமாரின் ஜாமீன் வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களைச் சட்ட விரோதமாக விற்பனை செய்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவிற்கு உதவியதாக கூறி சிபிஐ அதிகாரிகளால் சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைக் கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் 2ஆவது முறையாக ஜாமீன் கேட்டு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ”தான் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்தபோது மாதவராவின் குடோனில் ஆய்வு செய்து சுமார் 40 டன் குட்கா வரை அழிக்கப்பட்டது. மேலும் குட்கா தயாரித்ததற்காக மாதவராவிற்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் குறிப்பிடுவது போன்று, குட்கா ஆலைக்கு நான் உரிமம் வழங்கும் அதிகாரி இல்லை.
மேலும், குட்கா வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த வழக்கில் என்னைச் சேர்த்துள்ளனர். குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2 மாதமாகச் சிறையில் இருந்து வருகிறேன். அதனால் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தபோது, சிவக்குமாரின் ஜாமீன் வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டார்.�,