தமிழ்நாட்டில் உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் எவ்வளவு பழமையானவை என்று திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான வீடுகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் என 5000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழக வரலாற்றில் பொற்காலம் என்று போற்றப்படும் சங்க காலம் பற்றி பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளே இருந்துவந்த நிலையில், கீழடி அகழாய்வு தமிழர்களின் சங்க காலத்தின் முதன்மை தொல்லியல் ஆதாரமாக கிடைத்துள்ளது. கீழடி அகழாய்வை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் சங்க கால நாகரிகம், தமிழரின் தொன்மையை பறைசாற்றும் ஆய்வு என்று புகழ்ந்துவந்தனர்
இந்த சூழலில், கீழடி அகழாய்வுப் பணியின் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாம் மாநிலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதே நேரத்தில், பாஜக மத்திய அரசு சமஸ்கிருதத்தை பரவலாக்குவதிலும், நாடு முழுவதும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதிலும் முனைப்பு காட்டியது. இதனால், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வுப் பணியை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை இயங்கும் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கீழடிக்கு நேரில் வந்து ஆய்வுப் பணிகளை பார்வையிட்டார். பின்னர், கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கி அறிவித்தார். கீழடி அகழாய்வுப் பணிக்கு இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கீழடி அகழாய்வுப் பணி மத்திய அரசுக்கு மிக முக்கியமானது. இதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டாது என்று தெரிவித்தார். இதையடுத்து, கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்மையில், திமுக எம்பி கனிமொழி மாநிலங்களவையில், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களின் காலம் என்ன என்பதை மத்திய அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று நேற்று ஜூலை 26ம் தேதி பதில் அளித்துள்ளார்.
கீழடி தொடர்பாக கனிமொழி எழுப்பிய கேள்விகள், 1.தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தைக் கணக்கிட அரசாங்கம் கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருக்கிறதா?
2.அப்படி கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருந்தால் அதன் விவரங்கள், மற்றும் ஆராய்ச்சிப்படி தொல்பொருட்களின் காலம் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
3. அப்படி இல்லையென்றால், காரணங்கள் யாவை என்று கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், இந்திய தொல்லியல் துறை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் 2 கார்பன் மாதிரிகளை அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள பீட்டா ஆராய்ச்சி நிறுவனத்துகு அனுப்பியது. பீட்டா ஆராய்ச்சி நிறுவனம் அளித்த கார்பன் கால கணிப்பு ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, கீழடி தொல்பொருளின் முதல் கார்பன் மாதிரியின் காலம் 2160 ஆண்டுகள் பழமையானது என்றும் இரண்டாவது கார்பன் மாதிரியின் காலம் 2200 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிய வந்துள்ளது என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கீழடியின் காலம் கி.மு. 2200 ஆண்டுகள் பழமையானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.�,