இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி தற்போது ஃபார்மின்றி தவித்துவந்தாலும் இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் படித்துள்ளார்.
`யூகவ்’ என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்தியாவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் குறித்த சர்வே ஒன்றை ஆன்லைனில் நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 7.7 சதவிகித வாக்குகளுடன் தோனி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் 6.8 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், விராட் கோலி 4.8 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அசத்தினாலும், ஒருநாள் போட்டியில் தோனி பேட்டிங்கில் சொதப்பியதாகப் பலர் குற்றம்சாட்டினர். இருப்பினும் அவர் தற்போது இந்த இணையதள வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 தொடரின் முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து இந்திய அணியின் வெற்றி கேப்டனாக அறிமுகமானவர் மகேந்திரசிங் தோனி. இந்த வெற்றியைத் தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான அணிகளுக்கும் கேப்டனாகப் பதவியேற்ற தோனி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் (2009), ஒருநாள் உலகக் கோப்பை (2011), ஒருநாள் சம்பியன்ஷிப் (2013), ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை (2013) என பல்வேறு கோப்பைகளைக் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.�,