கடந்த எழுபதாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள, இந்திய கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனமாக ஆராய்ந்து, நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம். நம் நாட்டில் அதிகாரப்பூர்வமாக சேகரிக்கப்படும் தரவுகள், தரமானவையாக இருந்தாலும் துல்லியமானதாக இல்லை.
வேளாண்துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் குறைந்துவிட்டதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் சொல்லும். இதற்கு நேர்மாறாக, தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (NSSO) நடத்தும் ஆய்வுகள், இதே காலத்தில் வேளாண் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கும். உண்மையில் இந்திய கிராமங்களில் என்னதான் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஏதேனும் வழி உள்ளதா?
ஒரு குறிப்பிட்ட கிராமம் அல்லது ஒரு சில கிராமங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்மையாக கவனித்து, அவற்றைப் பதிவு செய்து, பின் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதற்கு உதவும் ஆய்வுகளை இந்தியாவில் நூறாண்டு காலமாகவே பொருளியல், சமூகவியல் அறிஞர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தின் ஒருசில கிராமங்களிலும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தின் அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கிய, அந்த கிராமத்தின் அனைத்து அம்சங்களையும் பதிவு செய்யும் முயற்சி முதன்முதலாக 1976-77 இல் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அந்த கிராமத்தில் அடுத்த தலைமுறையினர் என்ன செய்கின்றனர், அந்த கிராமம் என்னென்ன மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள அதே குடும்பங்களைக் கொண்டு 2016-17 இல் மீண்டும் ஒரு ஆய்வு நடத்தப்படும். இரு ஆய்வுகளையும் ஒப்பிட்டுப்பார்த்து, இதே காலத்தில் இந்திய சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு அந்த கிராமத்தில் காணப்படும் மாற்றங்கள் எந்தெந்த வகையில் ஒத்துப்போகிறது, எந்தெந்த வகையில் வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள மொராதாபாத் மாவட்டத்தின் பலன்பூர் எனும் கிராமத்தில் 1950களில் தொடங்கி, இன்றுவரை எழுபதாண்டுகளாக ஆய்வுகளை சமூக-அறிவியல் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை ஆய்வு நடத்தப்பட்டு, மூன்று தலைமுறையினர் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பதிவு செய்யும் முயற்சியில் தற்போது ஏழு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி இந்த ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பது சமீபத்தில் How Lives Change: Palanpur, India, and Development Economics எனும் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் சொல்லும் சேதி என்ன?
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பலன்பூரில் குறிப்பிடத்தக்க வருமானப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது; மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. வறுமை குறைந்துள்ளபோதும், கிடைக்கும் வாய்ப்புகளை சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை விட துரிதமாக, சாமர்த்தியமாகப் பயன்படுத்தி முன்னேறியிருப்பதால் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. நிலச் சீர்திருத்தங்கள், பசுமைப்புரட்சி காரணமாக நிலத்தில் முதலீடு செய்வதற்கு நிலவுடைமையாளர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் ஊக்கம் ஏற்பட்டது. பசுமைப்புரட்சி மூலதனம், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தால், ஒருபுறம் உற்பத்தித்திறன் அதிகரித்தது; மறுபுறம் மற்ற தொழில்களில் ஈடுபட தொழிலாளர்களை விடுவித்தது. இது முதற்கட்ட மாற்றம்.
அடுத்து, 1990களின் பிற்பாதியிலிருந்து கட்டிடத் தொழில், சில்லறை வணிகம், கிணறு வெட்டுவது, பக்கத்துக்கு நகரத்தில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்ப்பது போன்ற விவசாயமற்ற மற்ற தொழில்களில் வாய்ப்புகள் அதிகரித்ததால், பலன்பூரின் பொருளாதாரம் பன்முகத்தன்மை உடைய ஒன்றாக மாறியது. இந்த போக்கு, இந்தியாவில் மேலும் பல கிராமங்களிலும் இருப்பதை மற்ற ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு ஊரகப் பகுதிகளில் இருந்துதான் வருகிறது என்று நிதி ஆயோக் (NITI AAYOG) வெளியிட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவித்தது. பலன்பூரில் விவசாயமற்ற மற்ற தொழில்கள் பெருகி இருப்பினும், தொழிற்துறை பெரிதளவிற்கு வளரவில்லை என்று இந்த புத்தகம் நமக்கு சொல்கிறது.
பலன்பூரில் பல குடும்பங்கள், பல தொழில்கள் செய்து வருமானம் ஈட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட தொழிலை மட்டும் நம்பி குடும்பங்கள் இல்லை என்பதை நேர்மறை அம்சமாகப் பார்ப்பதா, இல்லை, பல தொழில்களில் ஈடுபடுவதால் எந்தவொரு வேலையிலும் கைதேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்று இதைப் புரிந்துகொள்வதா எனும் புதிருக்கான விடை தேடும் அவசியம் உள்ளது. சந்தை, தொழில்நுட்பம் இரண்டையும் பயன்படுத்தி பல குடும்பங்கள் வாழ்வில் முன்னேறி இருப்பினும், சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகள் இன்றும் நீடிக்கின்றன என்பது கவலையளிக்கிறது.
பலன்பூரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்ற கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளதா, இந்த மாற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்தை எப்படி மாற்றியமைத்துள்ளன, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் குறிப்பிட்ட கிராமங்களில் எவ்வகைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டால், அந்த புரிதல் தகுந்த பொருளாதாரக் கொள்கைகள் வடிவமைக்க பயனுள்ளதாக இருக்கும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”