இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி மாநிலக் குழு சார்பில், எல்பிஜி கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து நேற்று (நவம்பர் 22) நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலை சிலிண்டர்களின் விலைகளையும், மானியமில்லாத சிலிண்டர்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தி இருக்கின்றன. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானிய விலை சமையல் கியாஸ் விலை சமீபத்தில் ரூ.2.94 வீதம் உயர்த்தப்பட்டது.
இதுபோன்ற கியாஸ் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடாளுமன்றம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி மாநிலக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதுகுறித்து கட்சியின் டெல்லி மாநில செயலாளர், கே.எம்.திவாரி, “மானிய கியாஸ் சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார் அடையாள எண் தேவை என எண்ணெய் நிறுவனங்களின் வலியுறுத்தல் பொது மக்களுக்குச் சுமையாக உள்ளது. மானிய விலையில் வாங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், மானியமில்லாத சிலிண்டர் விலை 80 சதவிகித அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார். “இது மத்திய அரசு கொண்டுவந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கருப்பொருளையே அழிக்கும் நோக்கில் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
“கிராமப்புறங்களில் உள்ள, ஏழை மக்கள் ஒரு சிலிண்டரை ரூ.507.42 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனினும் ஒரு சில ஏழை மக்களால் மானிய விலையில்கூட சிலிண்டர்களை வாங்க முடிவதில்லை. இதன் விளைவாக சில ஏழைக் குடும்பங்கள் இன்றும்கூட மாட்டு சாணம், மரக்கட்டை உள்ளிட்ட எரி பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்கு சிலிண்டர்களில் எரிபொருளை நிரப்பாதவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த மே மாதத்தில் ரூ.527.50 ஆக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை, நவம்பரில் 80 சதவிகிதம் அதாவது 942.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கறுப்பு சந்தையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1200க்கு விற்கப்படுகிறது. இவ்வாறான விலை உயர்வால் ஏழை மக்களால் கியாஸ் சிலிண்டர்களை வாங்க முடியாது. ஏனென்றால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.131 மட்டுமே” என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு கியாஸ் விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும். எனவே, இவற்றின் விலை உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.�,