“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே..!”
இது புறநானூறு என்னும் நூலில் வரும் ஒரு வரி. உணவுக்கு நீர், நிலம் இரண்டும் முக்கியம் என்கிறது இது. இதுதான் தமிழ்நாட்டோட உணவு கலாச்சார அறிவியல். இதையேதான் இப்போதைய உணவியல் கொள்கையும் வலியுறுத்துது.
ஆனா, நம்மோட உணவுல இப்போ நிலமும் இல்ல, நீரும் இல்ல. ரசாயனங்கள்தான் அதிகமா இருக்கு!
டெல்லியைத் தலைமையாகக் கொண்ட ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ ஓர் ஆய்வு வெளியிட்டிருக்கு. நம்மோட சந்தையில இறக்குமதி செய்யப்படுற உணவுகள் எல்லாமே மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்ற அதிர்ச்சித் தகவலை இந்த ஆய்வு சொல்லுது!
இதை ஏன் முக்கியமா உங்ககிட்ட சொல்லுறேன்னா, குழந்தைகளுக்கான உணவில்தான் பெருமளவு மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் இருக்குன்னு பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சொல்லியிருக்கார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பல்வேறு வகையான விதிமுறைகள் இருக்கு குட்டீஸ். ஆனா, அவை எதுவுமே முறையா கடைப்பிடிக்கப்படலை என்பதையே இந்த ஆய்வு நமக்கு சொல்லுது.
மரபணு மாற்றப்பட்ட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள்ல, ‘இவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை’ என்கிற லேபிள் இருக்கணும். இந்த விதியும் 90 சதவிகிதம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
விளைவு, குழந்தைகளோட சாப்பாட்டுல மரபணு மாற்றப்பட்ட உணவுகள் கலந்திருச்சு. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பும் விழிப்புணர்வும் நம்மகிட்டதான் இருக்கு நண்பர்களே…
இதை எப்படிச் செய்யறது? இதோ சில டிப்ஸ்:
1) பெரிய கடையில உணவுப் பொருட்கள் வாங்கும்போது, ’இறக்குமதியான பொருட்கள்’ என்ற லேபிள் இருந்தால் அவற்றைத் தவிர்க்கலாம்.
2) ’Genetically Modified foods’ என்ற லேபிள் இருந்தால் அதைத் தவிர்க்கலாம்.
3) உள்ளூர்க் கடைகளிலும், நேரடி சில்லறை விற்பனைக் கடைகளிலும் பொருட்களை வாங்குமாறு பெற்றோரிடம் வலியுறுத்துங்க.
4) காய்கறிகளை உழவர் சந்தைகளிலும், நேரடி விவசாய மார்க்கெட்டுகளிலும் வாங்கச் சொல்லி பெற்றோரை வற்புறுத்துங்க.
உள்ளூர் பொருளாதாரத்தை வளர்ப்பதால் நம்ம விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். நம்மோட ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
**- நரேஷ்**�,”