)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

இது கிரிக்கெட்டுக்கு அப்பா!

கிரிக்கெட்டோட காட்ஃபாதர் விளையாட்டு இது. கிரிக்கெட்ல 11 பேர் இருந்தாதான் விளையாட முடியும். கிரிக்கெட் மட்டை, பந்துன்னு எதையும் நாம சுயமா செஞ்சுக்க முடியாது. ஆனா, இந்த விளையாட்டுக்கு ரெண்டே ரெண்டு குச்சி போதும். இரண்டு பேர்ல இருந்து எத்தன பேர் வேணாலும் விளையாடலாம். எந்த விளையாட்டைப் பத்தி பேசுறேன்னு தெரிஞ்சதா குட்டீஸ்?

**கிட்டிப்புள்**

விளையாடும் முறை: ஓர் அடி கனமுள்ள மூன்று அடிக் குச்சி மற்றும் அரை அடிக் குச்சி எடுத்துக்கணும். அந்த அரை அடிக் குச்சியின் இரு முனைகளையும் கூர்மையாக்கிக்கணும். இதுக்கு பேர்தான் ‘புள்’

மூன்று அடிக் குச்சியின் ஒரு முனையை மட்டும் கூர்மையாக்கிக்கணும். இதுக்கு பேர்தான் ‘கிட்டி’ (கிண்டி என்பதன் மரூஉ).

ஒரு சின்னக் குழி தோண்டி, அரை அடி புள்ளை அது மேல வெச்சிடணும். பின்னாடி திரும்பி நின்னு, இரு கால்களுக்கு இடையில் புள் இருக்குற மாதிரி நின்னு கிட்டியால கெந்திவிடணும். புள் எங்கே விழுந்ததோ அந்த இடத்துல இருந்து, கிட்டியால தட்டி மேலெழுப்பி எவ்ளோ தூரம் முடியுமோ அவ்ளோ தூரம் அடிக்கணும்.

நமக்கு சவலான விஷயம் என்னன்னா, அது எவ்ளோ அடி தூரம் போயிருக்குன்னு சரியா கணிச்சு சொன்னோம்னா, நமக்கு பாயின்ட். இன்னொரு முறை அடிக்கலாம். நாம கணிச்ச தூரம் தவறா இருந்ததுன்னா, எதிரணிக்கான வாய்ப்பாகிவிடும்.

நாம முதல்ல கிட்டியால புள்ளைக் கெந்திவிடுவோம் இல்லையா? அப்போ அதை எதிரணியினர் பிடிச்சுட்டாக்கூட நாம அவுட்.

யார் அதிக பாயின்ட் எடுத்து மீண்டும் தொடங்கிய இடம் வரை ஆடி வருகிறாரோ, அவர்தான் வின்னர்!

**மற்றொரு வடிவம்**

இந்த விளையாட்டுக்கு இன்னொரு வடிவமும் உண்டு. அது எப்படி என்று பார்க்கலாமா?

கில்லி அல்லது புள்ளைக் கெந்திவிட வேண்டும். எதிரணியினர் அதைப் பிடித்துவிட்டால் கெந்தியவர் அவுட்.

பிடிக்காவிட்டால் அந்த அணியினர் புள்ளை (கில்லியை) எடுத்துக் குழியை நோக்கி எறிய வேண்டும். கிரிக்கெட்டில் பவுலிங் போடுவதுபோல. அப்படி எறியப்படும் புள் அல்லது கில்லியைக் கிட்டியை வைத்துத் தடுக்க வேண்டும். கிட்டியில் படாமல் குழிக்குள் அல்லது குழிக்கு ஓர் அடி தூரத்துக்குள் கில்லி விழுந்தால் கெந்தியவர் அவுட். கிரிக்கெட்டில் போல்டு ஆவதுபோல.

கெந்தியவர் இந்தத் தாக்குதலைத் தடுத்து ஆடிவிட்டால் மூன்று முறை கில்லியை அடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

சிறு குச்சியின் விளிம்புகள் கூராக இருக்கும் அல்லவா? தாண்டை வைத்து அதில் அடித்தால் கில்லி எகிறும். அப்படி எகிறும் கில்லியை அந்தரத்தில் மீண்டும் ஒரு முறை அடிக்கலாம். கிரிக்கெட்டில் அடிக்கும் ஷாட் போல!

இப்படி மூன்று முறை அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி அடித்து விரட்டப்பட்ட கில்லி குழியிலிருந்து எத்தனை அடி தூரம் போய் விழுகிறதோ அத்தனை பாயின்டுகள் அடித்தவருக்குக் கிடைக்கும். அவர் அவுட் ஆகும்வரை இப்படி பாயின்டுகளைச் சேர்த்துக்கொண்டே போகலாம். கிரிக்கெட்டில் ஸ்கோர்போல.

அவர் அவுட் ஆனதும் எதிரணிக்கு வாய்ப்பு. கிரிக்கெட்டில் சேஸ் செய்வதைப் போல. இவர் அடித்ததை விடக் கூடுதல் பாயின்டுகள் எடுத்தால் அவருக்கு வெற்றி. இல்லாவிட்டால் முதலில் ஆடியவருக்கு வெற்றி.

**போனஸ் பாயின்டுகள்**

அடித்ததும் எகிறும் கில்லியை அந்தரத்திலேயே மீண்டும் மீண்டும் இரண்டு, மூன்று முறை தட்டி அடித்தால் போனஸ் பாயின்டுகள் கிடைக்கும்.

கில்லி கீழே வருவதற்குள் பத்து முறை அதைத் தட்டும் கில்லாடிகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆட்டம் எல்லாம் சிறந்த பேட்ஸ்மேன் சதம் அடிப்பதைப் போலப் பாயின்டுகளை அள்ளும்.

இந்த ஆட்டத்தை கில்லி – தாண்டு அப்டீன்னும் சொல்லுவாங்க. ஒரு முனை மட்டும் கூராக்கப்பட்ட நீளமான குச்சியைத் தாண்டு என்றும் இரு புறமும் கூராக்கப்பட்ட சிறிய குச்சியைக் கில்லி என்றும் சொல்வார்கள். கில்லி தண்டா என்னும் பெயரில் வடமாநிலங்களிலும் இது ஃபேமஸ்.

திறமைசாலிகளை, ‘அவன் பெரிய கில்லி’ என்று சொல்வது இந்த விளையாட்டின் மூலமாகத்தான் வந்தது. கில்லி துள்ளிப் பாய்வதுபோலப் பாயும் வீரன் என்று பொருள்.

தூரம் கணிக்கும் திறன், குறி பார்க்கும் திறன், திறமைக்கேற்ற நம்பிக்கையை வழங்குதல்னு எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், இந்த விளையாட்டு கொடுக்கும் சுவாரஸ்யத்துக்காகவே இதை விளையாடிட்டே இருக்கலாம்!

இதை எப்படி விளையாடுவது என்று இந்த [வீடியோவைப்](https://www.youtube.com/watch?v=bV4f8ZnMi8Q) பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

**- நரேஷ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share