)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

வாழ்க்கையில் ஜெயிக்கவைக்கும் விளையாட்டு!

விளையாட்டுகளைப் பற்றி நாம தெரிஞ்சுக்கிட்டிருகிற இந்த நேரத்துல, விளையாட்டால தன்னோட தடைகளைத் தகர்த்த ஒரு சுவாரஸ்யமான மனிதரைப் பத்தி உங்களுக்குச் சொல்லியே ஆகணும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவுல வெள்ளிப் பதக்கம் வாங்கி வந்திருக்கார் தருண் அண்ணா. திருப்பூர் மாவட்டத்துல இருக்க ராவுத்தம்பாளையம் அப்படீங்கிற சின்ன கிராமத்தில் இருந்த வந்தவர்தான் இந்த வெள்ளி நாயகன் தருண் அய்யாசாமி.

தன்னோட விளையாட்டுத் திறமையினால இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த இந்தத் தமிழ்நாட்டு வீரரைவிட, அவங்க அம்மாவைப் பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

நாம முன்னாடி பார்த்த மாதிரி, “விளையாடுவதற்குப் பொருட்கள் தேவையில்லை. திறமையும் ஆர்வமும் முயற்சியும் போதும்” எனும் கூற்றுக்கு எடுத்துக்காட்டா இவர் இருக்கார். சின்ன வயசுல ஒரு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூ கூட வாங்க முடியாம ஓடிக்கிட்டு இருந்தவருக்கு, இப்போ மாநில அரசும் மத்திய அரசும் ஓடி ஓடி உதவி செய்யுது.

தடை தாண்டுதல் விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலையும் பல தடைகளைத் தாண்டி வந்திருக்கார்.

தருண் அண்ணா ஏழு வயசா இருக்கும்போதே அவரோட அப்பா மஞ்சள் காமாலை வந்து இறந்துட்டார். அவருக்கு சத்யான்னு ஒரு தங்கச்சி இருக்காங்க. இந்த நிலையில யாரா இருந்தாலும் ‘விளையாடாத, ஒழுங்கா படிச்சு குடும்பத்தையும் தங்கச்சியையும் பாத்துக்கோனு’தான் சொல்லியிருப்பாங்க.

ஆனா, தருண் அண்ணாவோட அம்மா பூங்கொடி, அவரோட விளையாட்டுக்கு எந்தத் தடையும் போடல.

‘உன் திறமை மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. உன்னை உன் திறமைதான் உயர்த்தும். முழு நம்பிக்கையோட பிராக்டீஸ் பண்ணு’ன்னு சொல்லியிருக்காங்க!

இவ்ளோ நம்பிக்கையை அவங்களுக்கு விதைச்சது, தருண் அண்ணாவோட பயிற்சியாளர்கள். நமக்கான முக்கியமான ஒரு விஷயத்தை தருண் சொல்லியிருக்கார்.

“எனக்குப் பல தடைகள், சோதனைகள்னு வந்தப்போ என்னோட விளையாட்டுதான் அதை எதிர்கொள்வதற்கான வலிமையைக் கொடுத்தது. விளையாடுங்க! விளையாட்டுல ஜெயிக்கலைன்னாலும், வாழ்க்கையில அது நம்மை ஜெயிக்க வெச்சிடும்”.

வாங்க நண்பர்களே… இன்னும் இன்னும் விளையாடுவோம்!

**- நரேஷ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share