கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் – கத்திரிக்காய் – மாங்காய் சாம்பார்!

Published On:

| By Balaji

காவிரி டெல்டா பகுதிகளில் பெரும்பாலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாங்காய் சீசன் முடிந்தாலும்கூட இந்த முருங்கைக்காய், கத்திரிக்காய், மாங்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இருக்காது. இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

**தேவையான பொருட்கள்:**

துவரம்பருப்பு – 1 கப்

முருங்கைக்காய் – 2

உருளைக்கிழங்கு – 3

கத்திரிக்காய் – 5

மாங்காய் – 1

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 5 பல்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

சாம்பார்தூள் – 3 டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

**தாளிக்க:**

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

**செய்முறை:**

ஒருகனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவி) போட்டுப் பருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு அதனுடன் மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

பிறகு நறுக்கிய முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். (காய் போடறதுக்கு முன்பாக சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும். காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது, சாம்பார் சுவையாக இருக்காது).

காய் வெந்ததும் சாம்பார்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து சாம்பாரில் கொட்டிச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். பின்னர், அதன் மேல் கொத்தமல்லி தூவவும். சுவையான சாம்பார் தயார்

**குறிப்பு:**

பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாகக் கிடைக்காது. (இது எனது கருத்து மட்டும் அல்ல அனுபவம்).

பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

மாங்காய் சேர்ப்பதால் புளி தண்ணீர் தேவையில்லை.

பெருங்காயம் தேவையென்றால் தாளிக்கும்போது சிறிது போடலாம்.

கத்திரிக்காயை லேசாக வதக்கிப் போடவும்.

**கீர்த்தனா தத்துவம்:**

ஆபீஸோ, தனிப்பட்ட வாழ்க்கையோ, சோஷியல் மீடியாவோ… வெற்றிக்கான ஒரு சீக்ரெட் என்ன தெரியுமா? ஷேரிங். தெரிஞ்சதை மறைச்சு வெச்சா அதுல இருக்கிற தப்புகூட நமக்குத் தெரியாம போகலாம். அதனால தெரிஞ்சதை மத்தவங்ககூட ஷேர் செய்யுங்க. எப்படி அம்பு எய்யணும்னு தேவசேனைக்கு பாகுபலி சொல்லிக்கொடுத்ததால்தான் அவங்களுக்குக் காதலே வந்துச்சு. இல்லையா? ஷேர் செய்யுங்க…�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share