கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் கட்லெட்

Published On:

| By Balaji

உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியா. அமேசானை பிறப்பிடமாகக்கொண்ட மரவள்ளிக்கிழங்கு 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. முதன்முதலில் போர்ச்சுகீசியர்களால் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, இப்போது தென்னிந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள இந்த மரவள்ளிக்கிழங்கில் கட்லெட் செய்து,

வெங்காய காரச் சட்னியுடன் பரிமாறி அசத்துங்கள்.

**என்ன தேவை?**

மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ

ஓட்ஸ் – 100 கிராம்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

வெங்காயம் – 100 கிராம்

புதினா – ஒரு கப் (நறுக்கியது)

கேரட் – ஒன்று (துருவவும்)

பீன்ஸ் – 10

பச்சைப் பட்டாணி – 50 கிராம்

பிரெட் தூள் – ஒரு கப்

எண்ணெய் – 50 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப.

**எப்படிச் செய்வது?**

மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேகவைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஓட்ஸை வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு அதில் துருவிய கேரட், வேக வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்து துருவிய மரவள்ளிக்கிழங்கு, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் வறுத்து பொடித்த ஓட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும். தேவையான வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

[நேற்றைய ரெசிப்பி: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/18/4)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share