லாக் டவுன் நாட்களில் எடை அதிகரிப்பது, சாப்பிட்டவுடன் தூக்கம், அதிக சோம்பலாக உணர்வது போன்ற எல்லாவற்றுக்கும் காரணம், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் தூக்கச் சுழற்சியை பாதிக்கும் அதிக அளவிலான உணவுகள். இவற்றை நாம் கவனிக்கத் தவறுவதோடு, மீண்டும் மீண்டும் இதே தவறுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். கார்போஹைட்ரேட் உணவுகளுடன், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடும்போது நீண்ட நேரத்துக்குப் பசி உணர்வு தலைதூக்காது. அதற்கு இந்த பீட்ரூட் வேர்க்கடலை கட்லெட் உதவும். பீட்ரூட்டில் வைட்டமின் சி கணிசமான அளவில் உள்ளது.
**என்ன தேவை?**
பீட்ரூட் – 2
கொண்டைக்கடலை – ஒரு கப்
வேர்க்கடலை – கால் கப்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உலர் மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
ரவை – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
கொண்டைக்கடலையைக் கழுவி இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள், பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும். பீட்ரூட்களைக் கழுவவும். தோலை உரிக்கவும். சிறிய துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரைச் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் நீரிலிருந்து வடிகட்டி, அதைக் குளிர வைக்கவும். இதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் கடலை மாவு சேர்க்கவும். வேர்க்கடலையை இடித்து கலவையில் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு சரிபார்க்கவும். அதை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, அவற்றை கட்லெட் வடிவத்தில் தட்டவும்.
சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தயாரிக்கப்பட்ட கட்லெட்டுகளை சோள மாவு கலவையில் நனைத்து ரவையில் உருட்டவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை சுட்டெடுக்கவும். கட்லெட்டை கெட்சப் உடன் சூடாகப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்!](https://minnambalam.com/public/2020/05/07/3/orange-lemon-uice)�,